தனது மருமகனை அரசியல் வாரிசாக அறிவித்தார் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி
பகுஜன் சமாஜ் கட்சி மேலாளரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை(28) அரசியல் வாரிசாக அறிவித்தார். 2019 மக்களவைத் தேர்தலின் போது மாயாவதி தரப்பில் இருந்து முக்கிய பிரச்சாரங்களை மேற்கொண்ட ஆகாஷ் ஆனந்த், அவரது கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக உள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட முக்கிய கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது வாரிசை அறிவித்தார். பொதுவாக, பரம்பரை அரசியலை கடுமையாக விமர்சிக்கும் மாயாவதி, 2019 இல் தனது சகோதரர் ஆனந்த் குமாரை கட்சியின் தேசிய துணைத் தலைவராக நியமித்தார். அப்போது அவரது மருமகன் ஆகாஷ் தேசிய ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.
யாரிந்த ஆகாஷ் ஆனந்த்?
ஆகாஷ் ஆனந்த் 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக அரசியலில் நுழைந்தார். அதற்கு முன்பு, மாயாவதி மற்றும் பிற பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்களுடன் ஆகாஷ் ஆனந்த் இருப்பது போன்ற புகைப்படங்களும் வெளியாகி இருக்கிறது. 2017 உத்தரபிரதேச மாநில தேர்தல் பிரச்சாரத்திலும் ஆகாஷ் ஆனந்த் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆகாஷ் ஆனந்த், மாயாவதியின் இளைய சகோதரரான ஆனந்த் குமாரின் மகன் ஆவார். இந்நிலையில், நாடு முழுவதும் எங்களது கட்சி அமைப்பை பலப்படுத்தும் பொறுப்பு ஆனந்துக்கு வழங்கப்பட்டுள்ளது என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் உதய்வீர் சிங் கூறியுள்ளார்.