சென்னையில் மது அருந்தாதவரை அருந்தியதாக காட்டிய ப்ரீத் அனலைசர் மிஷின் விவகாரம் - போக்குவரத்து கூடுதல் ஆணையர் விளக்கம்
சென்னை பெருநகரில் வாகனத்தணிக்கையில் ஈடுபடும் போலீசார் ப்ரீத் அனலைசர்மிஷின் கொண்டு வாகனஓட்டிகள் மது அருந்தியுள்ளார்கள் இல்லையா என்பதை கண்டறியும் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள். இக்கருவில் 30mgக்குமேல் காட்டினால் அவரது வாகனம் தற்காலிகமாக பறிமுதல் செய்யப்படுவதோடு அபராதமும் விதிக்கப்படும். இந்நிலையில் சென்னையை சேர்ந்த தீபக் என்பவர் நேற்றுமுன்தினம் தனது வீட்டிற்கு காரில் சென்றுகொண்டிருக்கையில் டிடிகே.சாலையில் அவரை போலீசார் மடக்கிப்பிடித்து சோதனை செய்துள்ளனர். அப்போது அவர் குடித்ததாக அந்த மிஷின் காண்பித்துள்ளது, ஆனால் தீபக்கிற்கு எவ்வித கெட்டப்பழக்கமும் இல்லை என்று அவர் தொடர்ந்து வாதாடினார். ஒரு மணிநேர வாக்குவாதத்திற்கு பிறகு வேறுஒரு புது ப்ரீத் அனலைசர் கொண்டுவரப்பட்டு சோதனை செய்துள்ளனர். அதில் அவர் மது அருந்தவில்லை என்று காண்பித்துள்ளது. அதன்பின்னரே போலீசார் அவரை அங்கிருந்துச்செல்ல அனுமதித்தனர்.
தனது ஆதங்கத்தை வீடியோ வடிவில் வெளியிட்ட தீபக்
இந்த வீடியோ வைரலாக பரவியது. போலீசாரின் அத்துமீறல் குறித்து தீபக் வீடியோ ஒன்றினை வெளியிட்டு தனது ஆதங்கத்தை அதில் கூறியுள்ளார். அதில் அவர், மதுஅருந்தியதாக கூறி போலிமிஷினை வைத்து சோதனைசெய்து மோசடி செய்துவருகிறார்கள். பணம் பறிப்பதில் குறியாக உள்ளார்கள். எனவே அனைவரும் விழிப்புடன் இருங்கள் என்று கூறியுள்ளார். இந்நிலையில் தற்போது போக்குவரத்து காவல் கூடுதல்ஆணையர் கபில்குமார் சி.சரத்கர் இந்த சம்பவம் குறித்த விளக்கத்தினை அளித்துள்ளார். அதன்படி, சென்னையில் 245 ப்ரீத்அனலைசர் உள்ளது. இதில் தீபக்'கை சோதனை செய்த மிஷின் அவரையும் சேர்த்து 70பேரிடம் சோதனைசெய்துள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இதுபோல் நடந்திருக்கலாம். இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். போலீசார் மீது தவறு இருந்தால் பாரபட்சம் இன்றி கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.