Page Loader
பக்கத்து வீட்டு வாசலில் தொங்கி கொண்டிருந்த 2 வயது சிறுமியின் உடல்
குற்றம் சாட்டப்பட்டவர் தலைமறைவாகிவிட்டார், ஆனால் போலீஸ் குழுக்கள் அவரைத் தேடி வருகின்றன

பக்கத்து வீட்டு வாசலில் தொங்கி கொண்டிருந்த 2 வயது சிறுமியின் உடல்

எழுதியவர் Sindhuja SM
Apr 10, 2023
02:42 pm

செய்தி முன்னோட்டம்

உத்தர பிரதேசத்தில் இரண்டு நாட்களாக காணாமல் போயிருந்த 2 வயது சிறுமியின் சடலம் பக்கத்து வீட்டு வாசலில் தொங்கிய நிலையில் இருந்த பையில் கண்டெடுக்கப்பட்டது. கடந்த வாரம் குழந்தை காணாமல் போனபோது, ​​அண்டை வீட்டுக்காரர் சிறுமியை தேடுவதற்கு பெற்றோருக்கு உதவுவது போல் நடித்துள்ளார். அவரது வீட்டில் இருந்து பிணத்தின் வாடை எடுக்க ஆரம்பித்ததும் அவர் தப்பி ஓடிவிட்டார் என்று கூறப்படுகிறது. இரண்டு வயது மான்சியின் பெற்றோரும் அவளது ஏழு மாத சகோதரனும் கிரேட்டர் நொய்டாவின் தேவ்லா கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். சிறுமியின் பெற்றோர் இருவரும் அருகிலுள்ள தொழிற்சாலையில் தினசரி கூலி வேலை செய்பவர்கள் ஆவர். வெள்ளிக்கிழமை அன்று, சிறுமியின் பெற்றோர் இருவரும் வெளியே சென்றுவிட்டு வீடு திருப்பியபோது, மான்சியைக் காணவில்லை.

இந்தியா

குழந்தை பலாத்காரம் செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் பிரேத பரிசோதனையில் தெரியவரவில்லை

மான்சியைக் கண்டுபிடிக்க முடியாததால், பெற்றோர் சிறுமியைக் காணவில்லை என்று புகார் அளித்தனர். இரண்டு நாட்களுக்குப் பிறகு, சிறுமியின் தந்தை சிவகுமார் தனது பக்கத்து வீட்டுக்காரரான ராகவேந்திராவின் பூட்டிய வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக புகார் அளித்தார். போலீசாரின் உதவியுடன் அந்த வீட்டிற்குள் நுழைந்து பார்த்த போது, ஒரு கதவில் தொங்கவிடப்பட்டிருந்த பையில் மான்சியின் உடல் இருந்தது. கொலையாளி அந்த குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. "முதலில் இது பலாத்காரமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. ஆனால் அது பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர் தலைமறைவாகிவிட்டார். ஆனால் போலீஸ் குழுக்கள் அவரைத் தேடி வருகின்றன" என்று மூத்த நொய்டா காவல்துறை அதிகாரி ராஜீவ் தீட்சித் கூறியுள்ளார்.