11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி ஆண்டுக்கு இரண்டு முறை பொது தேர்வு: மத்திய அரசு
பள்ளி கல்வி முறையில் மிகப்பெரும் மாற்றங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, இனி ஆண்டுக்கு இரண்டு முறை பொது தேர்வுகள் நடத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கண்டிப்பாக இரண்டு மொழிகளை படிக்கச் வேண்டும் என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கை 2020(NEP) இணங்க, பள்ளிக் கல்விக்கான புதிய பாடத்திட்ட கட்டமைப்பை மத்திய கல்வி அமைச்சகம் இன்று(ஆகஸ்ட் 23) அறிமுகப்படுத்தியது.
ஸ்டேட் போர்டு பள்ளிகளுக்கு இந்த மாற்றங்கள் பொருந்துமா?
அடுத்த ஆண்டு முதல், அதாவது 2024ஆம் கல்வியாண்டு முதல் இந்த புதிய கட்டமைப்பு அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான வழிகாட்டுதலைகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான CBSE விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றங்கள் மாநில வாரிய(State board) பள்ளிகளில் பின்பற்றப்பட வேண்டுமா என்பதை அந்தந்த மாநிலங்களின் அரசுகள் முடிவெடுக்கும். ஆனால், திமுக தலைமையிலான தமிழக அரசு தேசிய கல்விக் கொள்கைக்கு பல எதிர்ப்புகளை தெரிவித்து வருவதால், தமிழக மாநில வாரிய பள்ளிகளில் இது அமல்படுத்தப்படுமா என்பது சந்தேகமே.
11, 12ஆம் வகுப்புகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் புதிய மாற்றங்கள்
பொது-தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்பட்டு, அந்த இரண்டு தேர்வுகளில் எந்த தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுக்கிறார்களோ அதை தக்கவைத்து கொள்ள அனுமதிக்கப்படும். மனப்பாடம் மற்றும் கோச்சிங்கின் அடிப்படையில் இல்லாமல், மாணவர்கள் எந்த அளவு பாடங்களை புரிந்திருக்கிறார்கள், எவ்வளவு திறன் வளர்ந்திருக்கிறது என்பதன் அடிப்படையில் மாணவர்கள் மதிப்பிடப்படுவார்கள். 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களுக்கு பிடித்த பாடங்களை தேர்வு செய்து கொள்ளலாம். பாடப்பிரிவின் அடிப்படையில் தான் பாடங்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற காட்டாயம் இருக்காது. எடுத்துகாட்டாக, கணிதம்,உயிரியல் பாடப்பிரிவில் படிக்கும் மாணவர்கள் தங்களுக்கு விருப்பம் இருந்தால் கணினி-அறிவியலையும் படிக்கலாம். 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் கண்டிப்பாக இரண்டு மொழிகளை படிக்க வேண்டும். குறைந்தது ஒரு மொழியாவது இந்திய மொழியாக இருக்க வேண்டும்.
பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் புதிய மாற்றங்கள்
கூடுதலாக, 2024 கல்வியாண்டுக்கு புதிய பாடப்புத்தகங்கள் உருவாக்கப்படும். பாட புத்தகங்களுக்கு 'கவர்' போடும் நடைமுறை இனி தவிர்க்கப்படும். பாட புத்தகங்கள் மலிவு விலையில் வழங்கப்படும். தேவையின் அடிப்படையில் சரியான நேரத்தில் தேர்வுகளை பள்ளிகளே நடத்தும் திறன் மேம்படுத்தபடும். பொது தேர்வுகளுக்கு கேள்வி தாளை உருவாக்குபவர்கள் மற்றும் விடை தாளை திருத்துபவர்கள் கண்டிப்பாக புதிதாக அறிமுகப்படுத்த இருக்கும் பல்கலைக்கழக சான்றிதழ் படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.