ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கும் வரை நாடாளுமன்றத்தில் அமளி தொடரும்: பாஜக
ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கும் வரை அவரை நாடுளுமன்றத்தில் பேச பாஜக தலைவர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. நாடாளுமன்றத்தில் தொடர்ந்து இரண்டு நாட்களாக இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இந்திய ஜனநாயகம் குறித்து லண்டனில் பேசியதற்காக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கும் வரை, நாடாளுமன்றத்தில் பெரும் அமளி நிலவும் என்று பாஜக வட்டாரங்கள் இன்று தெரிவித்துள்ளன. பலத்த முழக்கங்களுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று மீண்டும் ஒத்திவைக்கப்பட்டன.
மன்னிப்பு கேட்டால் தான் தீர்வு காண முடியும்: பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர்
ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக முழக்கமிட்ட போது, அதானி பிரச்சனைக்கு தீர்வு கோரி எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர். இதனால் நாடாளுமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டது. லண்டன் பிரச்சனைகளுக்கு பிறகு, ராகுல் காந்தி இன்று இரண்டாவது முறையாக நாடாளுமன்றத்திற்கு வந்திருக்கிறார். ராகுல் காந்தி, இதற்கு விளக்கம் அளிக்க தான் தயாராக இருப்பதாகவும் தன்னை பேச அனுமதித்தால் அதற்கு விளக்கம் அளிப்பேன் என்றும் கூறி இருந்தார். ராகுல் காந்தியின் கருத்து "மிகவும் அவமானகரமானது" என்று கூறிய பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா, நாடாளுமன்றத்தில் தீர்வு காணும் முன் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.