சண்டிகர் மேயர் தேர்தலில் 'இண்டியா' கூட்டணிக்கு எதிரான முதல் தேர்தல் போரில் பாஜக வெற்றி
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் மனோஜ் குமார் சோங்கர் வெற்றி பெற்றார். இது 'இண்டியா' கூட்டணிக்கும் பாஜகவுக்கும் இடையிலான முதல் தேர்தல் போராகும். எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளரின் 8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை அடுத்து, ஆம் ஆத்மி-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் குல்தீப் சிங் தோற்கடிக்கப்பட்டார். மொத்தம் பதிவான 36 வாக்குகளில் மனோஜ் சோன்கர் 16 வாக்குகளைப் பெற்றார். இதில் பதவியில் இருந்த உறுப்பினர் கிரோன் கெர் எம்பியின் வாக்கும் அடங்கும். அதே நேரத்தில் 'இண்டியா' கூட்டணியின் வேட்பாளர் குல்தீப் சிங்கின் 8 வாக்குகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவர் 12 வாக்குகளைப் பெற்றார்.
கடந்த எட்டு ஆண்டுகளாக சண்டிகர் மேயர் அலுவலகத்தில் ஆதிக்கம் செலுத்தும் பாஜக
35 உறுப்பினர்களைக் கொண்ட சண்டிகர் முனிசிபல் கார்ப்பரேஷனில் 8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதற்கு ஆம் ஆத்மி-காங்கிரஸ் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் குழப்பம் ஏற்பட்டது. 8 வாக்குகள் செல்லாது என அறிவித்ததை எதிர்த்து பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தை அணுகப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளாக சண்டிகர் மேயர் அலுவலகத்தில் பாஜக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. எனவே, ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரஸ் இணைந்து இந்த வருடம் மேயர் தேர்தலில் போட்டியிட்டன. ஆம் ஆத்மி கட்சி தனது வேட்பாளரை மேயர் பதவிக்கு நிறுத்தியது. காங்கிரஸ் வேட்பாளர்கள் மூத்த துணை மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கு போட்டியிட்டனர்.