மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 113 ஆக உயர்வு: 2/3 பெரும்பான்மைக்கு இன்னும் எத்தனை எம்.பி-க்கள் தேவை?
செய்தி முன்னோட்டம்
இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தனது பலத்தை அதிரடியாக அதிகரித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகிய 7 எம்.பி-க்கள் பாஜகவில் இணைந்ததை மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் முறைப்படி அங்கீகரித்ததைத் தொடர்ந்து, தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) இப்போது 'மூன்றில் இரு பங்கு' பெரும்பான்மையை எட்டும் இலக்கை நோக்கி முன்னேறி வருகிறது.
பாஜக மற்றும் தே.ஜ. கூட்டணியின் புதிய பலம்
எதிர்க்கட்சிகளின் தற்போதைய நிலை
ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய முகங்களான ராகவ் சதா, ஹர்பஜன் சிங், ஸ்வாதி மாலிவால், சந்தீப் பாடக், அசோக் மித்தல், ராஜிந்தர் குப்தா மற்றும் விக்ரம்ஜித் சிங் சாஹ்னி ஆகிய 7 பேர் பாஜகவில் இணைந்ததால், அக்கட்சியின் தனிப்பட்ட பலம் 106-லிருந்து 113 ஆக உயர்ந்துள்ளது. நியமன எம்.பி-க்களையும் சேர்த்து தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒட்டுமொத்த பலம் 141-லிருந்து 148 ஆக அதிகரித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சிக்கு இருந்த 10 உறுப்பினர்களில் 7 பேர் (மூன்றில் இரண்டு பங்கு) பிரிந்து சென்றதால், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது தகுதிநீக்க நடவடிக்கை எடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
மாநிலங்களவையில் மசோதா
மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை - ஒரு கணக்கீடு:
பாஜகவின் பலம் அதிகரித்துள்ள அதே வேளையில், எதிர்க்கட்சிகளின் பலம் கணிசமாகக் குறைந்துள்ளது. மாநிலங்களவைச் செயலகம் புதுப்பித்துள்ள பட்டியலின்படி, காங்கிரஸ் 29 உறுப்பினர்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. திரிணமூல் காங்கிரஸ் 13, திமுக 8, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 7, பிஜு ஜனதா தளம் 6, அதிமுக 5, ஐக்கிய ஜனதா தளம் 4, சமாஜவாதி 4 மற்றும் தேசியவாத காங்கிரஸ் 4 உறுப்பினர்களைக் கொண்டுள்ளன. மாநிலங்களவையில் அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் போன்ற மிக முக்கியமான மசோதாக்களை நிறைவேற்ற மூன்றில் இரு பங்கு (2/3) பெரும்பான்மை அவசியமாகும். இந்த மேஜிக் எண்ணிக்கையைப் பெற தே.ஜ. கூட்டணிக்கு மொத்தம் 163 உறுப்பினர்கள் தேவைப்படுகின்றனர். இப்போது 148 உறுப்பினர்களைக் கொண்டுள்ள கூட்டணிக்கு இன்னும் 15 எம்.பி-க்கள் தேவை.
2026 இறுதி நிலவரம் - எதிர்பார்ப்பு
மத்திய அரசு
வருங்கால வாய்ப்புகள் இந்த ஆண்டு இறுதியில் 30 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளது. அந்த இடங்களுக்கான தேர்தல் நடத்தப்பட்டால், தற்போதைய எம்.எல்.ஏ-க்களின் பலத்தின்படி பாஜகவுக்குக் குறைந்தது 5 இடங்கள் கூடுதலாகக் கிடைக்கும். இதன் மூலம் இந்த ஆண்டு இறுதியில் தே.ஜ. கூட்டணியின் பலம் 153 ஆக உயரும். மீதமுள்ள இடங்களுக்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அல்லது பிஜு ஜனதா தளம் போன்ற கட்சிகளின் ஆதரவு கிடைத்தால், மிக எளிதாக 163 என்ற இலக்கை எட்டிவிடலாம். இது மத்திய அரசுக்கு நாடாளுமன்றத்தில் முன் எப்போதும் இல்லாத அளவில் மிகப்பெரிய அதிகார பலத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.