இளைஞர்களைக் கவர பாஜக அதிரடி பிளான்! ஜென் ஜி அவுட்ரீச் குழுவில் நிதின் நபீன், ஸ்மிருதி இரானி நியமனம்
செய்தி முன்னோட்டம்
நாட்டிலுள்ள ஜென் ஜி என அழைக்கப்படும் இளம் தலைமுறை வாக்காளர்களுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்தி, கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. இதற்காகப் பிரத்யேகமாக ஜென் ஜி அவுட்ரீச் என்ற திட்டத்தை தீவிரமாக முன்னெடுக்க பாஜக தேசியத் தலைமை முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தை சிறப்பாக வழிநடத்துவதற்காக மூத்த தலைவர்கள் மற்றும் இளம் முகங்கள் அடங்கிய புதிய சிறப்புக் குழுவையும் கட்சித் தலைமை அமைத்துள்ளது.
முக்கிய தலைவர்கள்
ஸ்மிருதி இரானி, ஹர்ஷ் சங்கவி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் நியமனம்
பாஜக தேசியத் தலைவர் நிதின் நபீன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தச் சிறப்புக் குழுவில், கட்சியின் தேசியப் பொது செயலாளர்களான ஸ்மிருதி இரானி மற்றும் வினோத் தவ்டே ஆகியோர் முக்கியப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் குஜராத் மாநில அமைச்சர் ஹர்ஷ் சங்கவி, சத்தீஸ்கர் மாநில அமைச்சர் ஓ.பி. சவுத்ரி உட்படப் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அனுபவமிக்க மூத்த தலைவர்களும், இளம் தலைவர்களும் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளன.
நேரடி உரையாடல்
இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை அறிய நேரடி உரையாடல் திட்டம்
இந்த ஜென் ஜி அவுட்ரீச் திட்டத்தின் முதன்மை நோக்கம், இன்றைய இளைஞர்களின் எதிர்காலக் கனவுகள், தேவைகள் மற்றும் முக்கியப் பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதாகும்.
பாஜகவின் உயர் தலைவர்களுடன் இளைஞர்கள் நேரடியாகக் கலந்துரையாடி தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதற்கான பிரத்யேக தளத்தை இந்த இயக்கம் வழங்கும்.
தொடர் உரையாடல்கள், கருத்தரங்குகள் மற்றும் நவீனத் தொடர்பு வழிமுறைகள் மூலம் இளம் தலைமுறையினரை தேசிய அரசியலில் தீவிரமாக ஈடுபடுத்தப் பாஜக திட்டமிட்டுள்ளது.
கூட்டம்
பாஜகவின் புதிய தேசியப் பொறுப்பாளர்கள் கூட்டம் நிறைவு
முன்னதாக, பாஜக தேசியத் தலைவராக பொறுப்பேற்றுள்ள நிதின் நபீன் தலைமையில், புதிதாக அமைக்கப்பட்ட பாஜக தேசியப் பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளின் முதற்கட்ட அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.
தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலின் ஆறு சரணங்களும் பாடப்பட்டுத் தொடங்கப்பட்ட இக்கூட்டத்தில், கட்சியின் புதிய தேசிய நிர்வாகிகளின் வரவிருக்கும் அரசியல் பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தின் தொடர்ச்சியாகவே இளைஞர்களுக்கான இந்த அதிரடித் திட்டம் முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய குழு
புதிய தேசியக் குழுவின் முக்கிய நிர்வாகிகளின் விவரங்கள்
பாஜகவின் புதிய தேசியக் குழுவில் வினோத் தவ்டே மற்றும் சுனில் பன்சால் ஆகியோர் மீண்டும் தேசிய பொதுச் செயலாளர்களாகத் தங்களின் பதவிகளைத் தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.
அவர்களுடன் பிப்லப் குமார் தேவ், ஸ்மிருதி இரானி, சதீஷ் பூனியா, கஜேந்திர படேல், ஹரீஷ் துவேதி மற்றும் சஞ்சய் பாட்டியா ஆகியோர் புதிய தேசியப் பொதுச் செயலாளர்களாக இணைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கட்சியின் தேசியப் பொருளாளர் பொறுப்பும் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.