Loading...
அக்டோபர் 1 முதல் புதிய விதி அமல்! மானிய சிலிண்டர் பெற ஆதார் பயோமெட்ரிக் இணைப்பு கட்டாயம்
மானிய சிலிண்டர் பெற ஆதார் பயோமெட்ரிக் இணைப்பு கட்டாயம்

அக்டோபர் 1 முதல் புதிய விதி அமல்! மானிய சிலிண்டர் பெற ஆதார் பயோமெட்ரிக் இணைப்பு கட்டாயம்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 20, 2026
07:03 am

செய்தி முன்னோட்டம்

மத்திய அரசு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் மானிய விலையில் வீடுகளுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பெற ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்படுவதாக அறிவித்துள்ளது. வணிக மற்றும் தொழில் தேவைகளுக்கு மானியச் சிலிண்டர்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உண்மையான மற்றும் தகுதியுள்ள குடும்பங்களுக்கு மட்டுமே மானியம் சென்றடைவதை உறுதி செய்ய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

எளிய வழிகள்

பயோமெட்ரிக் சரிபார்ப்பை செய்யும் எளிய வழிகள்

நுகர்வோர்கள் தங்கள் இல்லங்களுக்கு சிலிண்டர் விநியோகம் செய்ய வரும் டெலிவரி நபரின் மொபைல் செயலி மூலம் உடனடியாக இந்த சரிபார்ப்பை செய்ய முடியும்.

அல்லது அருகில் உள்ள சிலிண்டர் விநியோகஸ்தர் மையத்திற்கு நேரடியாக சென்றும் ஆதார் பயோமெட்ரிக் பதிவை முடிக்கலாம்.

மேலும் இந்தியன் ஆயில், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி கேஸ் ஆகியவற்றின் பிரத்யேக மொபைல் செயலிகள் மூலமாகவும் நுகர்வோர்கள் வீட்டிலிருந்தபடியே தங்களின் சரிபார்ப்பைப் பூர்த்தி செய்ய முடியும்.

ஏற்கனவே சரிபார்ப்பை முடித்தவர்கள் மீண்டும் செய்யத் தேவையில்லை.

பயோமெட்ரிக்

பயோமெட்ரிக் செய்யாதவர்களுக்கு மானியமில்லா எரிவாயு சிலிண்டர்கள்

ஆதார் பயோமெட்ரிக் சரிபார்ப்பை மேற்கொள்ள விருப்பம் இல்லாத நுகர்வோருக்கும் சமையல் எரிவாயு விநியோகம் செய்யப்படும் என அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

இருப்பினும், அவர்கள் தங்களின் சமையல் எரிவாயு நிறுவனங்களின் இணையதளம் அல்லது வாட்ஸ்அப் போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும்.

இவர்களுக்கு மானியம் இல்லாத சந்தை விலையில் 5 கிலோ அல்லது 10 கிலோ கொண்ட எரிவாயு சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்படும்.

உண்மையான எந்தவொரு குடும்பத்திற்கும் எரிவாயு விநியோகம் மறுக்கப்படாது என்று அரசு உறுதியளித்துள்ளது.

ADVERTISEMENT

காலக்கெடு

காலக்கெடு நீட்டிப்பும் மத்திய அரசின் மானிய நிலவரமும்

முன்னதாக இதற்கான காலக்கெடு ஜூன் 30 என அறிவிக்கப்பட்டு, பின்னர் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பலமுறை நீட்டிக்கப்பட்டு செப்டம்பர் 14 வரை வழங்கப்பட்டது.

நாடு தழுவிய இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் மூலம் 12 கோடிக்கும் அதிகமான எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

செப்டம்பர் 2026 நிலவரப்படி 14.2 கிலோ எடையுள்ள ஒரு சிலிண்டருக்கு மத்திய அரசு சுமார் ரூ.210 மறைமுக மானியமாக வழங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT