பீகாரில் மருத்துவமனையில் அதிகாலையில் நேரிட்ட தீ விபத்து: 3 பேர் பலி, ஊழியர்கள் ஓட்டம்?
செய்தி முன்னோட்டம்
பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேரிட்ட பயங்கர தீ விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவில் (ICU) ஏற்பட்ட இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தீயணைப்பு அதிகாரி தெரிவித்துள்ள தகவலின்படி, இன்று அதிகாலை 3 மணியளவில் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது குறித்த அவசரத் தகவல் கிடைத்துள்ளது. தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைவதற்குள், ஒட்டுமொத்த ICU-யும் கரும் புகையினாலும், நச்சுப் புகையினாலும் முழுமையாகச் சூழப்பட்டிருந்தது. இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனை வளாகத்திற்குள் பெரும் கூச்சலும் குழப்பமும் நிலவியது.
காரணம்
ஆக்ஸிஜன் பிரிவில் ஷார்ட் சர்க்யூட்?
சம்பவ இடத்திற்கு விரைந்த சுமார் 12 தீயணைப்பு வாகனங்கள், கதவுகள் மற்றும் ஜன்னல்களை உடைத்து உள்ளே சிக்கியிருந்த நோயாளிகளைப் பத்திரமாக மீட்டனர். இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட நோயாளிகள் காயமடைந்தனர், அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. விபத்து குறித்துப் பேசிய மாவட்ட ஆட்சியர் சுப்ரத் குமார் சென், "முதற்கட்டப் பார்வையில், ஐசிஇயின் ஆக்ஸிஜன் பிரிவு மற்றும் மானிட்டர் அமைப்பில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாகவே இந்த தீ விபத்து நேரிட்டதாகத் தெரிகிறது. தற்போது வரை 3 பேர் உயிரிழந்துள்ளதை உறுதி செய்துள்ளோம். மேலும், இந்த மருத்துவமனையின் ஐசிஇ பொறுப்பு மருத்துவரும் பலத்த காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டு
ஊழியர்கள் எஸ்கேப்? உறவினர்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு
தீ விபத்து நேரிட்டவுடன் மருத்துவமனையின் பெரும்பாலான மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் நோயாளிகளைக் கைவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டதாகத் தீயணைப்புத் துறையினரும், நோயாளிகளின் உறவினர்களும் அடுக்கடுக்கான புகார்களைச் சுமத்தியுள்ளனர். ICU-லிருந்த தனது தந்தை விபத்தில் உயிரிழந்துவிட்டதாகவும், அவரது உடலைக்கூட ஒப்படைக்காமல் நிர்வாகத்தினர் மாயமாகிவிட்டதாகவும் பாதிக்கப்பட்ட ஒருவரின் குடும்பத்தினர் கண்ணீருடன் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், அவசரக் கால வெளியேற்றத்தின் போது ஏற்பட்ட குழப்பத்தால் தங்களின் உறவினர்கள் எங்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற விவரம் தெரியாமல் பல குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.