தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய பீகார் வாலிபர் கைது
தமிழகத்தில் பல வடமாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் இங்கு வந்து தங்கி பணிபுரிந்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்களுக்கு பாதுகாப்பு இல்லை, அவர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று அண்மை காலமாக புகார்கள் எழுந்து வந்தன. இதற்கு காரணம் சமூக வலைத்தளங்களில் அதுபோன்ற வீடியோக்கள் பெருமளவில் பரவியது தான். இது பெரும் அதிர்வலைகளை எழுப்பிய நிலையில், தமிழ்நாடு போலீசார் இது குறித்து தீவிர விசாரணையினை மேற்கொண்டு வந்தது. இந்த விசாரணையில் வதந்தி பரப்பிய பீகார் மாநிலத்தை சேர்ந்த பாஜக பிரமுகர்கள் 2 பேரின் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தது. அதில் ஒருவர் விஷயம் தெரிந்து நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்று விட்டார் என்று கூறப்படுகிறது.
சென்னை மாநகர காவல் ஆணையரக அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்ட குற்றவாளி
இதனையடுத்து மற்றோரு நபரை தமிழ்நாடு போலீசார் மிக தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் தற்போது போலீசாரால் தேடப்பட்டு வந்த மற்றொரு நபரான மணீஷ் காஷ்யப் என்பவரை பீகார் மாநிலம் பாட்னாவில் வைத்து தமிழ்நாடு தனிப்படை போலீசார் கைது செய்துள்ளார்கள் என்று செய்திகள் தெரிவிக்கிறது. கைது செய்யப்பட்ட அந்த பீகார் மாநில வாலிபரான மணீஷ் காஷ்யப்'பை தமிழ்நாடு தனிப்படை போலீசார் பாட்னாவில் இருந்து விமானம் மூலம் பலத்த பாதுகாப்புடன் சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர். அதன் பின்னர் சென்னை விமான நிலையத்தில் இருந்து சென்னை மாநகர காவல் ஆணையரக அலுவலகத்திற்கு பாதுகாப்போடு அழைத்து சென்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.