
போக்குவரத்து விதியை மீறினால் இனி உடனுக்குடன்... பெங்களூர் காவல்துறை புதிய முயற்சி
செய்தி முன்னோட்டம்
பெங்களூரில் போக்குவரத்து கண்காணிப்பு முற்றிலும் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. டிரினிட்டி சர்க்கிளில் பெங்களூர் காவல்துறை, கார்ஸ் 24 நிறுவனத்துடன் இணைந்து, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் இயங்கும் மின்னணுப் பதாகை (Billboard) ஒன்றை நிறுவியுள்ளது. கண்காணிப்புக் கேமராக்கள் மற்றும் அரசின் வாகனப் பதிவுத் தரவுத்தளமான வாஹன் (VAHAN) உடன் இணைக்கப்பட்டுள்ள இந்த உயர் தொழில்நுட்பத் திரை, 100 மீட்டர் சுற்றளவில் உள்ள வாகனங்களை லைவ்வாக ஸ்கேன் செய்யக்கூடியது. சுமார் பத்து வினாடிகளுக்குள், ஒரு ஓட்டுநருக்கு நிலுவையில் உள்ள போக்குவரத்து சலான்கள் (Challans) அல்லது காலாவதியான மாசுக்கட்டுப்பாட்டுச் சான்றிதழ் (PUC) உள்ளதா என்பதைக் கண்டறிந்து, அந்த விவரங்களை உடனடியாக பெரிய திரையில் காட்ட இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
பொறுப்பு
பொறுப்பான சாலைப் போக்குவரத்து
இது, ஓட்டுநர்களின் வாகன இணக்க நிலையை உடனடியாகத் தெரியப்படுத்தி, பொறுப்பான சாலைப் பழக்கத்தை ஊக்குவிப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அபராதம் செலுத்துவது மட்டுமல்ல, சாலைகளில் பாதுகாப்பான தேர்வுகளை மேற்கொள்வது பற்றிய நினைவூட்டல் என்று கார்ஸ்24 இணை நிறுவனர் கஜேந்திர ஜாங்கிட் வலியுறுத்தியுள்ளார். இந்த தொழில்நுட்பத்தின் செயல்திறன் பாராட்டப்பட்டாலும், சமூக ஊடகங்களில் பொதுமக்களின் கருத்துகள் கலவையாகவே உள்ளன. இந்தத் தொழில்நுட்பத்தை வேறுவிதமாகப் பயன்படுத்தலாம் என்று சிலர் வாதிடுகின்றனர். நிலுவையில் உள்ள அபராதங்களைக் காட்டுவதற்குப் பதிலாக, நிகழ்நேர சாலைக் குழிகள் (Potholes) பற்றிய தகவல்கள், அல்லது விதிமீறலில் ஈடுபடும் ஓட்டுநர்களைப் பகிரங்கப்படுத்துவது போன்றவற்றுக்கு இந்தப் பதாகையை பயன்படுத்தலாம் என பொதுமக்கள் பரிந்துரைத்துள்ளனர்.