மேற்கு வங்க ராஜ்பவன் வளாகத்தை உடனடியாக காலி செய்ய பணியில் இருக்கும் காவல்துறையினருக்கு உத்தரவு
மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் இன்று காலை ராஜ்பவனில் நிறுத்தப்பட்டிருந்த கொல்கத்தா காவல்துறையினரை உடனடியாக வளாகத்தை காலி செய்யும்படி உத்தரவிட்டார். ராஜ்பவனின் வடக்கு கேட் அருகே உள்ள போலீஸ் அவுட்போஸ்டை 'ஜன் மஞ்ச்'யாக மாற்ற ஆளுநர் போஸ் திட்டமிட்டுள்ளார். "ராஜ் பவனில் நிறுத்தப்பட்டிருந்த பொறுப்பாளர் உட்பட காவல்துறை அதிகாரிகள் அனைவரும் உடனடியாக வளாகத்தை காலி செய்யுமாறு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டள்ளது. பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி மற்றும் அம்மாநிலத்தில் நடந்த தேர்தலுக்குப் பிந்தைய வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள் சமீபத்தில் ஆளுநர் போஸை சந்திக்க ராஜபவன் சென்றிருந்தனர். ஆனால், காவல்துறை அதிகாரிகள் அவர்களை உள்ளே அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிவிட்டனர். இது நடந்து சில நாட்களே ஆகும் நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.