
தமிழகத்தில் இன்று(ஏப்ரல்.,14) நள்ளிரவு முதல் மீன்பிடி தடைகாலம் துவக்கம்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு மாநிலத்தில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் இந்த காலகட்டத்தில் மீன்பிடிக்க தடை விதிப்பது வழக்கம்.
அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரையுள்ள கடல் பகுதிகளில் இன்று(ஏப்ரல்.,14) நள்ளிரவு முதல் வரும் ஜூன் 14ம் தேதி வரை 60 நாட்கள் விசைப்படகுகளில் கடலுக்குள் சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதே போல் மேற்கு கடற்கரை எல்லையான கன்னியாகுமரி முதல் நீரோடி வரை ஜூன் 1ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை மீன்பிடிக்க தடை விதிக்க படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சென்னை காசிமேடு துறைமுகத்தில் ஏற்கனவே கடலுக்குள் சென்ற படகுகளும் திரும்பிய நிலையில் 1000க்கும் மேற்பட்ட விசை படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தடைகாலம்
மீன்வளத்துறை கமிஷனர் கே.எஸ்.பழனிச்சாமி அறிக்கை
இந்த மீன்பிடி தடை காலத்தில் பாரம்பரிய மீன்பிடி கலன்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மீன்வளத்துறை கமிஷனர் கே.எஸ்.பழனிச்சாமி கூறுகையில், படகுகள் கரை திரும்ப வேண்டும் என்பது உத்தரவு.
எனவே இந்த அறிவிப்புக்கு முன்னர் கடலுக்குள் சென்ற படகுகளும் இன்று இரவு 12 மணிக்குள் கரைக்கு திரும்ப வேண்டும்.
ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றோருக்கு இது குறித்த தகவல்களை அளித்து கரை திரும்ப ஏற்பாடு செய்ய வேண்டும்.
அதே போல் மீன்பிடி தடைகாலம் துவங்கிய பின்னர் கரை திரும்பும் விசைப்படகுகளின் விவரங்கள் உடனடியாக தலைமை அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும்.
அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.