தமிழகத்தில் குட்கா பொருட்களுக்கு மேலும் ஓராண்டிற்கு தடை விதிப்பு
தமிழ்நாடு மாநிலத்தில் மேலும் ஒரு ஆண்டிற்கு புகையிலை மற்றும் குட்கா போன்ற பொருள்களுக்கு தமிழக அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டு மக்களின் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் புகையிலை மற்றும் நிக்கோடின் அடிப்படையிலான பான் மசாலா உள்ளிட்ட புகைப்பொருட்களை தமிழகத்தில் தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தமிழக அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. இந்த அதிரடி சட்டத்தின் விதிப்படி, இத்தகைய போதை பொருட்களை உற்பத்தி செய்யவோ, எடுத்து செல்வதோ, விற்பனை செய்வதோ, எடுத்து செல்வதோ, பதுக்கி வைப்பதோ தண்டனைக்குரிய குற்றம் என்றும் அறிவிக்கப்பட்டது.
கைது நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது
இதனையடுத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்த உத்தரவின்படி, குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒழிக்க தமிழக உணவு பாதுகாப்புத்துறை, தமிழக காவல்துறை போன்ற பல்வேறு அரசு துறைகளின் சார்பில், தீவிரமான கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதோடு இதில் ஈடுபடும் நபர்கள் கைது செய்யப்படும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் சோதனையின் போது, அகப்படும் புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்யும் நடவடிக்கைகள் குறித்தும் அவ்வப்போது தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது. இதனிடையே, இந்த புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையானது நேற்றோடு(மே.,23) முடிந்த நிலையில், மேலும் ஓராண்டிற்கு இந்த தடையினை தமிழக அரசு மீண்டும் நீட்டித்துள்ளது. இதன்படி, வரும் 2024ம்ஆண்டு மே 23ம்தேதி வரை இந்த தடையானது அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.