ஆட்டிசம் குறைபாடு: குழந்தையை சேர்க்க மறுத்த பள்ளிக்கு கண்டனம்
ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தையை சேர்த்து கொள்ள மறுத்த பள்ளிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. வேலூரில் உள்ள ஒரு கிருஸ்தவ பள்ளி ஆட்டிசம் குறைபாடு உள்ள தனது குழந்தையை சேர்த்துக்கொள்ள மறுத்ததாக தாய் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். "1870களில் இருந்து 1960ஆம் ஆண்டு வரை வாழ்ந்து மறைந்த புனிதர், தொழு நோயாளிகளுக்கும் பெண்களுக்கும் பல சேவைகளை செய்துள்ளார். அந்த புனிதரின் சேவைகளை பின்பற்றாமல் அவரது பெயரை மட்டும் பயன்படுத்துவது வருத்தம் அளிக்கிறது. குழந்தைக்கு அனுமதி மறுத்த அந்த பள்ளி குழந்தைக்கு மட்டுமல்லாமல் தனது பெயரை தாங்கி இருக்கும் புனிதருக்கும் துரோகம் இழைத்துவிட்டது." என்று இதை விசாரித்த உயர்நீதிமன்றம் வருத்தம் தெரிவித்துள்ளது.
ஆட்டிசம் குறைபாடு என்றால் என்ன?
இந்த வழக்கு விசாரணை ஆரம்பித்த பிறகு குறிப்பிட்ட அந்த பள்ளி ஆட்டிசம் உள்ள அந்த குழந்தையை சேர்த்துக்கொள்ள முன்வந்தது. இதை சுட்டிக்காட்டிய நீதிபதி அதை முதலிலேயே செய்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், குழந்தையை எந்த பள்ளியில் சேர்க்க தாய் விரும்புகிறாரோ அங்கேயே சேர்க்கலாம் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆட்டிசம் என்பது ஒரு நரம்பியல் வளர்ச்சிக் கோளாறாகும். இந்த கோளாறு ஸ்பெக்ட்ரத்தில் இருப்பதால் இதன் தீவிரத்தன்மை ஒவ்வொருவருக்கும் வேறுபட்டு இருக்கும். இது சரியாக எதனால் ஏற்படுகிறது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. ஆட்டிசம் உள்ளவர்களில் சிலர் பேசுவதற்கும் சமூக செயல்பாடுகளிலும் சிக்கலை எதிர்கொள்வர். குழந்தைகள் முகம் பார்த்து கற்றக்கொள்ளவில்லை என்றாலோ கண்களை பார்த்து பேசவில்லை என்றாலோ மருத்துவரை நாடுவது நல்லது.