செப்டம்பர் 21இல் அதிஷி டெல்லி முதல்வராக பொறுப்பேற்பு; ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பு
டெல்லி முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் அதிஷி சனிக்கிழமை (செப்டம்பர் 21) பதவியேற்பார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. இந்த பதவியேற்பு நிகழ்வின்போது அதிஷி மட்டுமே பதவியேற்பார் என்று ஆம் ஆத்மி கட்சி முதலில் முடிவு செய்திருந்தது. ஆனால், அந்த முடிவு பின்னர் மாற்றப்பட்டு, அவரது தலைமையிலான ஒட்டுமொத்த அமைச்சர் குழுவும் இந்த நிகழ்வில் பதவியேற்பது என்று தீர்மானிக்கப்பட்டது. முன்னதாக செவ்வாய்க்கிழமை அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் ஆறு மாத சிறைவாசத்திற்கு பிறகு வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவால், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மக்களை சந்தித்து தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் முதல்வர் பதவியை ஏற்பேன் என சூளுரைத்தது குறிப்பிடத்தக்கது.