அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா முடிவைத் தொடர்ந்து டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி தேர்வு
அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ததையடுத்து, டெல்லியின் புதிய முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் அதிஷி பதவியேற்கவுள்ளார். செவ்வாய்கிழமையன்று (செப்டம்பர் 17) நடைபெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் அவரது பெயரை தனது வாரிசாக முன்மொழிந்ததை அடுத்து கட்சி ஒருமனதாக ஒப்புக்கொண்டது. காலை 11.20 மணியளவில் கெஜ்ரிவால் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. முன்னதாக இந்த கூட்டம் ஆம் ஆத்மியின் தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் சந்தீப் பதக் உரையுடன் தொடங்கியது. டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியரான விஜய் சிங் மற்றும் திரிப்தா சிங் தம்பதியருக்கு 1981ஆம் ஆண்டு ஜூன் 8ஆம் தேதி பிறந்த அதிஷி பஞ்சாபி ராஜ்புத் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
அதிஷியின் அரசியல் வாழ்க்கை
ஆரம்ப காலத்திலிருந்தே ஆம் ஆத்மி கட்சியில் இருந்த கட்சியை வலுப்படுத்துவதில் தொடர்ந்து முக்கிய பங்காற்றி வருபவர்களில் அதிஷியும் ஒருவர். 2019 மக்களவைத் தேர்தலில், கிழக்கு டெல்லி தொகுதியில் அதிஷி போட்டியிட்டார். கட்சியுடனான அவரது ஆரம்பகால ஈடுபாடு மற்றும் அவரது முயற்சிகள் அவரை கட்சியின் அணிகளில் ஒரு குறிப்பிடத்தக்க தலைவராக உறுதிப்படுத்தியுள்ளன. கல்காஜியின் எம்.எல்.ஏ.வான அதிஷி, ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக் குழுவின் உறுப்பினராகவும், தற்போது டெல்லி அரசில் கல்வி, பொதுப்பணித்துறை, கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சராகவும் பணியாற்றி வருகிறார். அவர் டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் முதன்மைக் கல்விக்கான ஆலோசகராகவும் ஜூலை 2015 முதல் 17 ஏப்ரல் 2018 வரை பணியாற்றினார்.