'ரிலீஸ்காக மட்டுமே பேசுகிறார் முதல்வர் விஜய்': உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு
செய்தி முன்னோட்டம்
தமிழகச் சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய்யின் பதிலுரைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தங்களுக்குப் பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதாகக் கூறியும் எதிர்க்கட்சியான திமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதன் பின்னர்ச் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய்யை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். சட்டமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், "சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்து நாங்கள் எழுப்பிய 15 கேள்விகளுக்கு நேரடியாகப் பதிலளிக்காமல், திமுக ஆட்சி நடப்பதாக நினைத்துக் கொண்டு முதல்வர் அடுக்கடுக்கான பொய்யான குற்றச்சாட்டுகளைப் சுமத்தியுள்ளார். எங்களின் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கச் சபாநாயகரிடம் வாய்ப்பு கேட்டோம். முதலில் ஒப்புக்கொண்டவர், பிறகு வாய்ப்பு மறுத்துவிட்டார். சபாநாயகரின் இந்த ஒருதலைப்பட்சமான போக்கைக் கண்டிக்கிறோம்" என்றார்.
குதிரை பேரம்
சினிமா பாணி பேச்சு மற்றும் குதிரை பேரம் குற்றச்சாட்டு
முதலமைச்சரின் உரையை கடுமையாக சாடிய அவர், "யாரோ எழுதிக் கொடுத்ததை 3 நாட்களாக மனப்பாடம் செய்து வந்து, சினிமா ஷூட்டிங் போல வசனங்களையும் பஞ்ச் டயலாக்குகளையும் ரீல்ஸ்க்காக மட்டுமே பேசியுள்ளார். மிசா மற்றும் சர்காரிய கமிஷன் பற்றிப் பேச இவருக்கு என்ன தகுதி இருக்கிறது?"
"ஆட்சியமைக்க ஆதரவு கேட்டு முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ-க்களிடம் தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டதை அவர்களே அம்பலப்படுத்தியுள்ளனர். மேலும், முதல்வரின் அலுவலக ஆலோசகர்களான விஷ்ணு ரெட்டி, சுஜய் ரெட்டி, அனில் ரெட்டி ஆகியோர்தான் மாநிலத்தின் கனிம வளங்களை முழுமையாகக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்; இதற்கான ஆதாரங்களை விரைவில் வெளியிடுவோம்" எனக் கூறினார்.
சட்டப்படி பதில்
"வழக்குகளுக்கு சட்டப்படி பதில் அளிப்போம்"
திமுக தலைவர்கள் யாரும் ஊழல் வழக்கில் தண்டிக்கப்படவில்லை என்று குறிப்பிட்ட அவர், அதிமுகவிலிருந்து வந்த விஜயபாஸ்கர், கு.ப.கிருஷ்ணன் போன்றவர்களை பக்கத்தில் வைத்துக்கொண்டு எங்களைப் பற்றிப் பேசத் தகுதியில்லை என்றும், கே.என்.நேரு வீட்டில் நடத்தப்பட்ட சோதனைகள் உள்ளிட்ட அனைத்துப் பழிவாங்கும் நடவடிக்கைகளையும் சட்டப்படி எதிர்கொள்வோம் என்றும் தெரிவித்தார்.
உதயநிதி ஸ்டாலினின் இந்த அதிரடிப் பேட்டியால் தமிழக அரசியல் களம் மேலும் சூடடைந்துள்ளது.