'ஆதாரம் இருக்க போய் தான் பேசினாரு': சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்ட திமுக, குண்டுக்கட்டாக தூக்கி எறியப்பட்ட எம்.எல்.ஏ-க்கள்
செய்தி முன்னோட்டம்
தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய்யின் பதிலுரையில் இடம்பெற்ற சர்க்காரியா கமிஷன் மற்றும் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை அவைக் குறிப்பில் இருந்து நீக்கக் கோரி திமுக உறுப்பினர்கள் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து, அவர்களை அவையிலிருந்து வெளியேற்றச் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் உத்தரவிட்டார். சட்டசபை கூடியதும், அமலாக்கத்துறை வழக்குகள் மற்றும் சர்க்காரியா கமிஷன் அறிக்கை குறித்து முதல்வர் பேசியது மரபு மீறல் என்றும், அவற்றை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றும் திமுக எம்.எல்.ஏ எ.வ.வேலு வலியுறுத்தினார். இதற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் CTR.நிர்மல்குமார், நீதிமன்றத்திலும் அமலாக்கத்துறை அறிக்கையிலும் உள்ள உண்மை ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே முதலமைச்சர் பேசினார் என்றும், சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை மறுக்க முடியாது என்றும் கூறி முதல்வரின் உரையை நியாயப்படுத்தினார்.
முடிவு
சபாநாயகரின் அதிரடி முடிவு
முதல்வர் விஜய் உரையாற்றுவதற்கு முன்பாகவே தன்னிடம் உரிய ஆதாரங்களைச் சமர்ப்பித்துள்ளதால், அவரது பேச்சில் உள்ள எந்தவொரு பகுதியையும் அவைக் குறிப்பிலிருந்து நீக்க முடியாது எனச் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் திட்டவட்டமாக அறிவித்தார்.
சபாநாயகரின் இந்த அறிவிப்பால் கொந்தளித்த திமுக உறுப்பினர்கள், சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டுத் தொடர் முழக்கங்களை எழுப்பினர்.
அவையின் நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்து இடையூறு விளைவித்ததால், அவையின் முன்னவரான அமைச்சர் செங்கோட்டையனின் கோரிக்கையை ஏற்று, அமளியில் ஈடுபட்ட திமுக உறுப்பின அனைவரையும் அவைக் காவலர்கள் மூலம் குண்டுக்கட்டாக வெளியேற்றச் சபாநாயகர் உத்தரவிட்டார்.
சட்டமன்றத்தில் நடைபெற்ற இந்த அதிரடி சம்பவங்கள் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.