அமலாக்கத்துறையின் 3வது சம்மனையும் புறக்கணித்தார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அமலாக்க இயக்குநரகத்தின் மற்றொரு சம்மனையும் புறக்கணித்தார். அரவிந்த் கெஜ்ரிவால் அரசின் மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கை அமலாக்க இயக்குநரகம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே சில முக்கிய ஆம் ஆத்மி தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அதே வழக்கு விசாரணைக்காக ஜனவரி 3ஆம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்க இயக்குநகரத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், அந்த சம்மனை அரவிந்த் கெஜ்ரிவால் இன்று புறக்கணித்துள்ளார்.
கெஜ்ரிவாலுக்கு அனுப்பப்படும் 3வது சம்மன் நோட்டீஸ்
இது குறித்து அமலாக்க இயக்குநரகத்திற்கு பதிலளித்திருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால், விசாரணைக்கு ஒத்துழைக்கத் தான் தயாராக இருப்பதாகவும், ஆனால், சம்மன் நோட்டீஸ் சட்டவிரோதமாக அனுப்பப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார். அமலாக்க இயக்குனரகம் முதலமைச்சரைக் கைது செய்ய திட்டமிட்டிருப்பதாகவும், தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து கெஜ்ரிவாலை தடுக்க அமலாக்கத்துறை விரும்புவதாகவும் ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது. அமலாக்க இயக்குனரகம் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆம் ஆத்மியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர் நேற்று தெரிவித்தார். இந்த பிரச்சனையில் கெஜ்ரிவாலுக்கு அனுப்பப்படும் 3வது சம்மன் நோட்டீஸ் இதுவாகும். நவம்பர் 2 மற்றும் டிசம்பர் 21 ஆம் தேதிகளுக்கு அனுப்பப்பட்ட சம்மன்களையும் அவர் இதற்கு முன்பு புறக்கணித்திருக்கிறார்.