இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்கள் நீட்டிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு
மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் மேலும் 7 நாட்கள் இடைக்கால ஜாமீன் கோரி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். PET-CT ஸ்கேன் மற்றும் பிற மருத்துவ பரிசோதனைகளை செய்ய இந்த நீட்டிப்பு கோரப்படுவதாக ஆம் ஆத்மி கட்சி(AAP) தெரிவித்துள்ளது. ஏழு கட்ட மக்களவைத் தேர்தலின் கடைசி நாளான ஜூன் 1-ஆம் தேதி வரை ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது, மேலும், ஜூன் 2-ஆம் தேதி அவர் சிறைக்குத் திரும்ப வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு
மார்ச் 21 அன்று டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். அவரது இல்லத்தில் ED குழு விரிவான விசாரணை நடத்தியதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். இது டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு கணிசமான பின்னடைவை ஏற்படுத்தியது. குறிப்பாக மணிஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயின் போன்ற ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்கள் ஊழல் குற்றச்சாட்டில் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலும் சிறையில் அடைக்கப்பட்டதால் டெல்லி பெரும் அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதற்கிடையில், டெல்லி மதுபான கொள்கை வழக்கு "முற்றிலும் போலி" என்று பிரதமர் நரேந்திர மோடி ஒப்புக்கொண்டதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.