சிறையில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் கோமா நிலைக்கு தள்ளப்படலாம்: ஆம் ஆத்மி
அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்நிலை குறித்து திகார் சிறை அதிகாரிகள் கூறிய கூற்றுகளை ஆம் ஆத்மி கட்சியின்(ஏஏபி) ராஜ்யசபா எம்பி சஞ்சய் சிங் இன்று கடுமையாக விமர்சித்துள்ளார். சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நலமாக இருப்பதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் சமீபத்தில் திகார் சிறை அதிகாரிகள் கூறி இருந்தனர். இந்நிலையில், "சிறைக்கு சென்ற பிறகு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 8.5 கிலோ எடை குறைந்துள்ளது.அவரது இரத்த சர்க்கரை அளவு ஐந்து முறை 50 mg/dL க்கும் கீழ் வீழ்ச்சி அடைந்தது" என்று எம்பி சஞ்சய் சிங் அதை கடுமையாக விமர்சித்துள்ளார்.
சிறை அதிகாரிகள் குற்றம் இழைத்துள்ளனர்: சஞ்சய் சிங்
மேலும், சிறைக் கைதியின் பொய்யான மருத்துவ அறிக்கையை வெளியிட்டதன் மூலம் சிறை அதிகாரிகள் குற்றம் இழைத்ததாகவும், அவர்களின் கருத்துக்கு உடன்பாடு இல்லை என்றும் சஞ்சய் சிங் கூறியுள்ளார். "எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்நிலையை பரிசோதித்து வருகிறது. மேலும் கெஜ்ரிவால் உடல் எடை வேகமாக குறைந்து வருவதையும், இரத்தச் சர்க்கரைக் குறைவால் அவதிப்படுவதையும் அவர்கள் கண்டறிந்துள்ளனர். அவரது ரத்தத்தில் சர்க்கரை அளவு 50 மி.கி./டி.எல்.க்கு கீழே ஐந்து முறை குறைந்துள்ளது. இதனால் அவர் நழுவி, கோமா நிலைக்கு போக கூட வாய்ப்புள்ளது. இது அவருக்கு மரணத்தை கூட ஏற்படுத்தலாம்" என்று சஞ்சய் சிங் கூறியுள்ளார்.