சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா-கொடியேற்றத்துடன் துவக்கம்
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, கோயில் கருவறை முன்பு உள்ள கொடிமரத்தில் உற்சவ ஆச்சாரியார் நடராஜ குஞ்சுதபாத தீட்சிதர் கொடியேற்றி இத்திருவிழாவை துவக்கி வைத்தார். கொடி மரத்திற்கு நூறுக்கும் மேற்பட்ட பொது தீட்சிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க, மேளத் தாளத்துடன் இந்த கொடியேற்றும் நிகழ்வு அரங்கேறியது. இதனையடுத்து, 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் சுவாமி வீதி உலா சிறப்புமிக்க பல்வேறு பல்லக்குகளில் நடைபெறும்.
500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபாடு
இதனையடுத்து ஜனவரி 5ம் தேதி தேர்த்திருவிழா நடைபெறவுள்ளதோடு, அன்றிரவு 8 மணிக்கு முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறவுள்ளது. 6ம் தேதி சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு மாகாபிஷேகம் நடைபெறும். அதன் பின்னர் சொர்ண அபிஷேகமும் நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து 7ம் தேதி பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் முடிவடையும் என்று கூறப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை தீட்சிதர்கள் சிறப்பாக செய்து வரும் நிலையில், சிதம்பரம் நகராட்சி சார்பில் குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த திருவிழா நடந்து முடியும் வரை பாதுகாப்பு கருதி, போலீஸ் சூப்பரண்டு சக்தி கணேசன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.