ஜூன் 9க்குள் மல்யுத்த அமைப்பின் தலைவரை கைது செய்யுங்கள்: விவசாயி தலைவர்கள் எச்சரிக்கை
மல்யுத்த அமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக போராடி வரும் இந்தியாவின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கு விவசாயத் தலைவர்கள் பெரும் ஆதரவளித்து வருகின்றனர். இந்நிலையில், பிரிஜ் பூஷனைக் கைது செய்யுங்கள் அல்லது பெரிய போராட்டத்தை எதிர்கொள்ளுங்கள் என்று விவசாயத் தலைவர்கள் மத்திய அரசுக்கு ஒரு புதிய இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளனர். "மல்யுத்த வீரர்களின் குறைகளை அரசு நிவர்த்தி செய்ய வேண்டும். அவரை (பிரிஜ் பூஷன் சரண் சிங்) கைது செய்ய வேண்டும். இல்லையெனில், ஜூன் 9 ஆம் தேதி மல்யுத்த வீரர்களுடன் டெல்லி ஜந்தர் மந்தருக்குச் சென்று நாடு முழுவதும் எங்கள் போராட்டத்தை ஆரம்பிப்போம்." என்று விவசாயி தலைவர் ராகேஷ் திகாத் கூறியுள்ளார்.
4 மாதங்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்கள்
"மல்யுத்த வீரர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்பட வேண்டும், பிரிஜ் பூஷன் சரண் சிங் கைது செய்யப்பட வேண்டும்," என்று திகாத் மேலும் கூறியுள்ளார். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) தலைவரும் ஆளும் பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சரண் சிங், பெண் மல்யுத்த வீரர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பிரிஜ் பூஷனை கைது செய்யக்கோரி 4 மாதங்களாக தொடர்ந்து மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக விவசாய குழுக்கள் நேற்று பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் தொடர் போராட்டங்களை நடத்தினர். மேலும், உத்திரபிரதேசத்தில் விவசாய குழுக்கள் இணைந்து மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக "காப் மகாபஞ்சாயத்" என்ற கூட்டத்தையும் நடத்தினர்.