ராணுவ வீரர் மனைவி தாக்கப்பட்ட விவகாரம் - திருவண்ணாமலை எஸ்.பி. கார்த்திகேயன் விளக்கம்
செய்தி முன்னோட்டம்
ஜம்மு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவத்தில் ஹவில்தாரராக பணிபுரிபவர் பிரபாகரன்.
இவரது மனைவி கீர்த்தி, திருவண்ணாமலை கலசப்பாக்கம் படவேடு ரேணுகாம்பாள் கோயில் அருகேயுள்ள இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் பேன்சி கடை ஒன்றினை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பிரபாகரன் அண்மையில் ஒரு வீடியோ பதிவினை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டார்.
அதில் அவர், தனது மனைவி நடத்திவரும் கடையில் சில மர்மநபர்கள் நுழைந்து, நிலப்பிரச்சனை காரணமாக கடையினை அடித்து நொறுக்கியதோடு, 120க்கும் மேற்பட்டவர்கள் தனது மனைவியினை அரைநிர்வாணமாக்கி தாக்கியதாக கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.
இந்த வீடியோ வெளியாகி வைரலான நிலையில், கீர்த்தி அளித்த புகாரின்பேரில், தாக்குதலில் ஈடுபட்ட ஹரிஹரன் என்னும் ஹரிதாஸ் மற்றும் செல்வராஜ் என்னும் 2 நபரை கைது செய்தனர் என தெரிவிக்கப்பட்டது.
விளக்கம்
ராணுவ வீரருக்கு தவறான தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம்
இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி.கார்த்திகேயன் மறுப்புத்தெரிவித்து ஓர் விளக்கத்தினை அளித்துள்ளார்.
அதில் அவர், "ராணுவ வீரர் மனைவி நடத்திவந்த கடை குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்த ராமு என்பவரிடம் வாடகைக்கு எடுத்துள்ளனர்.
கடை சம்பந்தமாக ராமுக்கும், கீர்த்திக்கும் பிரச்சனை இருந்துள்ளது.
இதனால் கடையினை காலிசெய்யுமாறு நடந்த தகராறில் கீர்த்தியின் சகோதரர் ஜீவா ராமுவை கத்தியால் குத்தியுள்ளார்.
இதுகுறித்து இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்துவருகிறது" என்று கூறியுள்ளார்.
மேலும், "ராணுவ வீரர் பிரபாகரனுக்கு தவறான தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
அவரது மனைவியை யாரும் மானபங்கப்படுத்தவில்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதில் குற்றம்ச்செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான தண்டனையளிக்கப்படும்.
தயவுசெய்து யாரும் வதந்திகளை நம்பி பரப்பவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்" என்று விளக்கமளித்துள்ளார்.