டெண்டருக்கு முன்பே முடிந்த பணி? முதலமைச்சர் விஜய் ஆட்சியில் முதல் முறைகேடு புகார்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், தாம்பரம் மாநகராட்சியில் ரூ.45 லட்சம் மதிப்பிலான டெண்டர் நடைமுறையில் பெரும் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அறப்போர் இயக்கம் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. ஊழலற்ற, லஞ்சமற்ற நிர்வாகத்தை வழங்குவதே தங்களது கொள்கை எனத் தேர்தல் பிரச்சாரத்தில் தவெக வலியுறுத்திய நிலையில், ஆட்சியின் தொடக்க காலத்திலேயே எழுந்துள்ள இந்த புகார் அரசியல் களத்தில் புயலைக் கிளப்பியுள்ளது.
விவகாரம்
டெண்டருக்கு முன்பே முடிந்த பணி
இந்த விவகாரத்தில் அறப்போர் இயக்கம் முன்வைத்துள்ள முக்கியக் குற்றச்சாட்டு, அதிகாரப்பூர்வமாக டெண்டர் விடப்படுவதற்கு முன்பாகவே சம்பந்தப்பட்ட பணிகள் முழுமையாக முடிவடைந்துவிட்டன என்பதாகும்.
பணிகள் முன்கூட்டியே நிறைவடைந்த பிறகு, வெறும் காகித அளவிலான நடைமுறைக்காக பின்னர் டெண்டர் கோரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் டெண்டர் விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டு, கூட்டுச்சதி மற்றும் நிர்வாக ரீதியிலான ஊழல் நடைபெற்றுள்ளதாக அறப்போர் இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
சர்ச்சை
ஜூலையில் திறப்பு விழா, ஆகஸ்டில் டெண்டர் கோரிக்கை?
அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள ஆதாரங்களின்படி, அமைச்சர் சரத்குமார் ஜூலை மாதத்திலேயே திறந்து வைத்த சிலை தொடர்பான பணிகளுக்குத்தான், ஆகஸ்ட் மாதத்தில் டெண்டர் விடப்பட்டுள்ளது.
டெண்டர் விடுவதற்கு முன்பே பணி எப்படி நிறைவடைந்தது மற்றும் அதற்கான நிதி ஒப்பந்த நடைமுறைகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டன என்ற அடுக்கடுக்கான கேள்விகளை அந்த அமைப்பு எழுப்பியுள்ளது.
முதலமைச்சர் விஜய் தொழில்முறை பயணமாக லண்டன் சென்றுள்ள வேளையில், இந்த விவகாரம் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இக்கடுமையான குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கக்கோரி, முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு அதிகாரிகளிடமும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககத்திலும் (DVAC) அறப்போர் இயக்கம் அதிகாரப்பூர்வமாக புகார் அளித்துள்ளது.