பத்திரப்பதிவில் புதிய புரட்சி: ஆகஸ்ட் 17 முதல் நேரில் செல்லாமல் 'வருகை இல்லா ஆவணப்பதிவு' அமல்
செய்தி முன்னோட்டம்
பொதுமக்கள் இனி சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமலேயே, இணையவழியில் எங்கிருந்தும் பத்திரப்பதிவு மேற்கொள்ளும் 'வருகை இல்லா ஆவணப்பதிவு' திட்டத்திற்கு நிர்வாக ரீதியான ஒப்புதல் வழங்கி தமிழக அரசு தற்பொழுது அரசாணை வெளியிட்டுள்ளது. முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தைத் தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் தலைமையில் துறை ரீதியான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், இத்திட்டம் குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
கட்டாயம்
ஆகஸ்ட் 17 முதல் புதிய நடைமுறை கட்டாயமாக்கல்
"பொதுமக்கள் தங்களின் சொத்துப் பதிவுகள் மற்றும் இதர ஆவணப்பதிவுகளுக்காக இனி சார்பதிவாளர் அலுவலகங்களில் காத்து கிடக்க வேண்டிய அவசியமில்லை. இணையவழியில் 'வருகை இல்லா ஆவணப்பதிவு' செய்யும் புதிய வசதி வரும் ஜூலை 17-ஆம் தேதி முதல் கட்டாயமாக்கப்படுகிறது" என்றார் அமைச்சர். இதன் மூலம் பொதுமக்கள் தங்களுக்கு வசதியான நேரத்தில், எங்கிருந்தோ இணையவழியில் தங்களது ஆவணங்களைச் சமர்ப்பித்து தடையின்றி பதிவு செய்து கொள்ள முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நன்மைகள்
இப்புதிய திட்டத்தின் முக்கிய நன்மைகள்
குறிப்பிட்ட சில முக்கிய சார்பதிவாளர் அலுவலகங்களில் எப்போதும் காணப்படும் அலைமோதும் கூட்ட நெரிசல் இனி கணிசமாகக் குறையும். அலுவலகங்களுக்கு இடையேயான வேலைப்பளு சமமாக்கப்பட்டு, பதிவுப் பணிகள் மிக விரைவாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடைபெறும். பொதுமக்களின் காத்திருப்பு நேரம் குறைவதுடன், பதிவுத்துறையின் சேவைத் தரம் மற்றும் செயல்திறன் பல மடங்கு மேம்படும். மேலும், தமிழ்நாட்டில் பெருமளவில் ஆவணப்பதிவு நடைபெறும் மற்றும் அதிக வருவாய் ஈட்டும் முக்கியப் பதிவு அலுவலகங்களில், தற்காலிக பொறுப்பாளர்களுக்கு பதிலாக நிரந்தர சார்பதிவாளர்கள் பணியமர்த்தப்படுவதை உறுதி செய்யும் விதமாகப் பணி மாறுதல் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.