கர்நாடகா பள்ளியில் மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்யும் மற்றொரு வீடியோ வைரல்
கர்நாடகா மாநிலம் சிக்கபல்லாபூரில் உள்ள அரசுப் பள்ளியில் திங்கள்கிழமை இரண்டு மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்வது கேமராவில் பதிவாகியுள்ளது. கர்நாடகாவில் இது போன்ற ஒரு சம்பவம் நடப்பது இது முதல் முறையல்ல. கடந்த இரண்டு மாதங்களில் இது போல பதிவாகி இருக்கும் மூன்றாவது வழக்கு இதுவாகும். இதற்கு முன்பாக, கோலாரில் உள்ள யெலவல்லி மொரார்ஜி தேசாய் குடியிருப்புப் பள்ளியில் மாணவர்கள் செப்டிக் டேங்க்கை சுத்தம் செய்யும் வீடியோ வெளியானது. அதற்கு அடுத்தபடியாக, பெங்களூருவில் உள்ள அந்தரஹள்ளி அரசுப் பள்ளியில் மாணவர்கள் பள்ளி கழிவறைகள் கழுவும் காட்சிகள் வெளியாகின.
கடந்த ஆண்டு டிசம்பரில் ஷிவமொக்காவில் பதிவாகிய சம்பவம்
தற்போது சிக்கபல்லாபூர் பள்ளியில் நடந்திற்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, அந்த சம்பவத்தை விசாரிக்க மாநில அரசுக் குழு அந்த பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாநில அரசுக் குழு மாணவர்களிடம் இது குறித்து விசாரணை நடத்தவுள்ளது. இதேபோன்ற மற்றொரு சம்பவம் கடந்த ஆண்டு டிசம்பரில் ஷிவமொக்காவில் பதிவாகியது. மாணவர்கள் பள்ளி கழிப்பறைகளை சுத்தம் செய்து துடைக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டது அப்போது வெளியான ஒரு வைரல் வீடியோவின் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது. அப்போது, இதுபோன்ற பணிகளைச் செய்ய குழந்தைகளை வற்புறுத்துபவர்களுக்கு துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை விடுத்திருந்தார். அதோடு, அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரை கர்நாடகா கல்வித்துறை இடைநீக்கம் செய்தது.