ரூ.11.6 கோடி நன்கொடையாக வழங்கிய பெயர் வெளியிட விரும்பாத நபர்
கேரளாவை சேர்ந்த சாரங் மேனன்-ஆதித்தி நாயர் என்ற தம்பதி மும்பையில் தங்கள் 15 மாத குழந்தை நிர்வானுடன் வசித்து வருகின்றனர். நிர்வானுக்கு 'ஸ்பைனல் மஸ்குலர் ஆன்ட்ரோபி' என்ற அரிய வகை மரபணு கோளாறு இருக்கிறது. அதை குணப்படுத்த கிட்டத்தட்ட ரூ.17.5 கோடி தேவை. இவ்வளவு தொகை அவர்களிடம் இல்லாததால், அவர்கள் ஆன்லைன் மூலம் நன்கொடை வசூலிக்க ஆரம்பித்தனர். இதை மிலாப் என்ற கிரௌட் பண்டிங் தளத்தின் மூலம் செய்ய அவர்கள் முடிவு செய்தனர். அவர்களுக்கு நன்கொடை வழங்கும் படி மலையாள நடிகை ஆஹனா கிருஷ்ணாவும் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேட்டுக்கொண்டார்.
ரூ.11 கோடியே 60 லட்சம் நன்கொடை
"17 லட்சம் பேர் தலா 100 ரூபாய் நன்கொடையாக வழங்கினால் ரூ.17 கோடி கிடைத்து விடும்." என்று அவர் கூறி இருந்தார். மிலாப் கிரௌட் பண்டிங் தளத்தின் மூலம் 56 ஆயிரம் பேர் நன்கொடை வழங்கி இருந்தனர். எனவே மொத்தமாக ரூ.15 கோடிக்கு மேல் நிதி திரட்டப்பட்டு இருந்தது. இதில், பெயர் வெளியிட விரும்பாத ஒரு நபர் ரூ.11 கோடியே 60 லட்சம் நன்கொடையாக வழங்கி இருந்தார். அவருக்கு நன்றி தெரிவித்த பெற்றோர், தங்கள் நம்பிக்கை வீண் போகவில்லை என்று கூறியுள்ளனர். மேலும், தங்கள் குழந்தையின் மருத்துவ செலவுக்கு இன்னும் ரூ.80 லட்சம் மட்டுமே தேவை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.