CBSE 3 மொழி கொள்கை; மத்திய கல்வி அமைச்சகத்திற்கு எதிராக அறிக்கை வெளியிட்டார் அண்ணாமலை
செய்தி முன்னோட்டம்
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த 2026-27 கல்வியாண்டிலிருந்தே 3-வது மொழியைக் கட்டாயமாக்கி வெளியிட்டுள்ள புதிய சுற்றறிக்கைக்கு, பா.ஜ.க மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். இந்தத் திடீர் உத்தரவு மாணவர்களுக்குத் தேவையற்ற மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதால், மத்திய கல்வி அமைச்சகம் உடனடியாக இதனைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (மே 26) தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையின் விவரம் பின்வருமாறு:
எதிர்ப்பு
"அன்று வரவேற்றேன்; இன்று எதிர்க்கிறேன் ஏன்?"
கடந்த 2026 ஏப்ரல் மாதம் சிபிஎஸ்இ அமைப்பு, மாணவர்களுக்கு 6-ஆம் வகுப்பிலிருந்து மூன்று மொழிகள் கட்டாயம் என்றும், அதில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும் அறிவித்திருந்தது. சிறுவயதிலேயே இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தை மாணவர்கள் அறிந்துகொள்ள இது உதவும் என்பதால், அந்த முடிவை வரவேற்றவர்களில் நானும் ஒருவன் என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். அன்றைய அறிவிப்பில், 9-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 3-வது மொழியைக் கட்டாயமாக்கும் திட்டம், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்தப்படும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதிர்ச்சி
வார்த்தை தவறிய சிபிஎஸ்இ - பெற்றோர் அதிர்ச்சி
ஆனால், கடந்த வாரம் (மே 15, 2026) சிபிஎஸ்இ அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள புதிய சுற்றறிக்கையில், தங்களது முந்தைய அறிவிப்பை மீறி, இந்தக் கல்வியாண்டிலிருந்தே (2026 ஜூலை 1 முதல்) 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 3-வது மொழியைக் கட்டாயமாக்கியுள்ளனர். சிபிஎஸ்இ அமைப்பின் இந்தத் திடீர் மாற்றம் குறித்து அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ள முக்கியக் கருத்துக்கள்: "இந்தத் திடீர் அறிவிப்பு பெற்றோர்களுக்கு, குறிப்பாகத் தமிழக மாணவர்களின் பெற்றோர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்களின் குழந்தைகள் ஏற்கனவே 6-ஆம் வகுப்பிலேயே தாங்கள் விரும்பிய மொழியைத் தேர்வு செய்து படித்து வருகின்றனர். இப்போது திடீரென, 9-ஆம் வகுப்பில் மூன்று மொழிகளைக் கட்டாயமாகக் கற்க வேண்டும், அதில் இரண்டு இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்று கூறுவது முறையல்ல."
கோரிக்கை
அண்ணாமலையின் மத்திய அரசுக்கான கோரிக்கை
மிகவும் குறுகிய காலத்திற்குள், 9-ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றுமொரு புதிய மொழியைக் கற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது, குழந்தைகளுக்குத் தேவையற்ற மனஅழுத்தத்தை ஏற்படுத்தி, அவர்களின் மொத்தக் கல்வித் திறனையும் பாழாக்கிவிடும். எனவே, இந்த புதிய சுற்றறிக்கையை மத்திய கல்வி அமைச்சகம் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். 9-ஆம் வகுப்பில் மூன்று மொழிகள் திட்டத்தை, முன்பே திட்டமிட்டபடி 3 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என அண்ணாமலை மத்திய அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார். அண்ணாமலையே மத்திய கல்வி அமைச்சகத்தின் இந்த அவசரப் போக்கிற்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளது அரசியல் மற்றும் கல்வி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
கடந்த 2026 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், CBSE அமைப்பு, மாணவர்களுக்கு ஆறாம் வகுப்பிலிருந்து மூன்று மொழிகள் கட்டாயம் என்றும், அந்த மூன்று மொழிகளில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும் அறிவித்தபோது, இந்தியாவின் பலதரப்பட்ட இலக்கிய மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை,… pic.twitter.com/JY7iIXMLdY
— K.Annamalai (@annamalai_k) May 26, 2026