LOADING...
அமித் ஷாவைச் சந்திக்க காரில் பாஜக கொடி இல்லாமல் டெல்லி பறந்த அண்ணாமலை; அடுத்த அரசியல் அதிரடிக்கு தயாரா?
சென்னையில் இருந்து அவசரமாக டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார் அண்ணாமலை

அமித் ஷாவைச் சந்திக்க காரில் பாஜக கொடி இல்லாமல் டெல்லி பறந்த அண்ணாமலை; அடுத்த அரசியல் அதிரடிக்கு தயாரா?

எழுதியவர் Venkatalakshmi V
Jun 02, 2026
01:04 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, அக்கட்சியிலிருந்து விலகி புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக வெளியாகி வரும் தகவல்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த யூகங்களுக்கு இடையே, அவர் நேற்று மாலை சென்னையில் இருந்து அவசரமாக டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்ட அண்ணாமலையின் காரில் வழக்கமாக இருக்கும் பாஜக கொடி இடம்பெறவில்லை. மேலும், அவருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ள பாதுகாப்புப் படை வீரர்களின் வாகனமும் அவருடன் வரவில்லை என்பது அரசியல் நோக்கர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சந்திப்பு

டெல்லியில் அமித் ஷா மற்றும் தேசியத் தலைவர்களுடன் சந்திப்பு

டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்கள் அவரிடம் கட்சி விலகல் மற்றும் புதிய கட்சித் தொடக்கம் குறித்துக் கேள்வி எழுப்பியபோது, "அனைத்து கேள்விகளுக்கும் இன்னும் இரண்டு நாட்களில் பதில் அளிக்கிறேன்" என்று அண்ணாமலை சுருக்கமாகக் கூறினார். அண்ணாமலை, இன்று பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் மற்றும் பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசினார். இதனைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் அவர் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். இந்தச் சந்திப்புகளுக்குப் பிறகு அவர் தனது அடுத்தகட்ட அரசியல் முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வாய்ப்புள்ளதாக ஊடங்கங்கள் தெரிவிக்கின்றன. எனினும், அவரைத் தக்கவைக்க மீண்டும் மாநிலத் தலைவர் பதவியோ அல்லது மாநிலங்களவை எம்.பி பதவியோ வழங்கப்படலாம் என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

பின்னணி

'விஜய் - அண்ணாமலை' களம்: பின்னணி என்ன?

தமிழகத்தில் நடிகர் விஜய் அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளதால், திராவிட கட்சிகளுக்கு மாற்றான அரசியல் களம் முற்றிலும் மாறிவிட்டதாக அண்ணாமலை கருதுவதாகக் கூறப்படுகிறது. அண்ணாமலையின் ஆதரவாளர்கள் கூறுகையில், "தமிழகத்தில் சினிமா நடிகர்களுக்கு இணையாக அண்ணாமலைக்கும் இளைஞர்கள் மற்றும் ரசிகர்களின் ஆதரவு பெருமளவில் உள்ளது. அவர் புதிய மக்கள் இயக்கம் அல்லது கட்சி தொடங்கினால், அடுத்த தேர்தல் களம் விஜய் வெர்சஸ் அண்ணாமலை என்றே இருக்கும்" எனத் தெரிவித்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக, ஜூன் 4 அன்று வரவிருக்கும் அவரது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் "தலைவா தரணி ஆள வா" என அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டி அதிரடி காட்டியுள்ளனர்.

Advertisement

அரசியல் ஸ்டண்ட்

அண்ணாமலையின் அரசியல் ஸ்டண்ட்கள்

தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை, சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் திமுக அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்தும், காவல் துறையின் செயல்பாட்டைக் கண்டித்தும் டிசம்பர் 2024-ல் கோயம்புத்தூரில் உள்ள தனது வீட்டின் முன்பு தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். இந்தப் போராட்டத்தின் முக்கிய அம்சங்கள்: சாட்டையடி: தன்னைத்தானே 6 முறை சாட்டையால் அடித்துக்கொண்டு தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார். காலணி அணியாத விரதம்: திமுக அரசு முழுமையாக அகற்றப்படும் வரை தான் காலணி அணியப்போவதில்லை என சபதம் ஏற்றார். விரதம்: 48 நாட்கள் விரதம் இருந்து, பின்னர் முருகனின் அறுபடை வீடுகளுக்கும் சென்று தமிழகத்தின் நிலை குறித்து முறையிடப் போவதாகவும் அறிவித்தார்.

Advertisement