அண்ணாமலையின் 'விலகல்' முடிவால் ஆந்திரா பாஜகவிற்கு இழப்பு; கைமாறிய ராஜ்யசபா சீட்
செய்தி முன்னோட்டம்
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை கட்சியிலிருந்து விலகப் போவதாக வெளியாகியுள்ள தகவல்கள், அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) ராஜ்யசபா இடப் பங்கீட்டிலும் மிகப்பெரிய அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இன்று(ஜூன் 5) அண்ணாமலை தனது விலகல் கடிதத்தை அதிகாரப்பூர்வமாக வழங்க உள்ளதாக எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆந்திராவில் பாஜகவிற்கு ஒதுக்கப்படவிருந்த ஒரு ராஜ்யசபா எம்பி சீட்டை அக்கட்சி தற்போது தாராளமாக விட்டுக் கொடுத்துள்ளது. கூட்டணி வட்டாரங்களின்படி, ஆந்திரப் பிரதேசத்தில் காலியாகும் ராஜ்யசபா இடங்களில் ஒன்றை பாஜகவிற்கு ஒதுக்கி, அதன் மூலம் அண்ணாமலையை நாடாளுமன்ற மேலவைக்கு அனுப்ப டெல்லி மேலிடம் திட்டமிட்டிருந்தது. ஆனால், அண்ணாமலை பாஜகவிற்கு குட்பை சொல்லும் முடிவில் உறுதியாக இருப்பதால், அந்தத் திட்டம் தவிடுபொடியாகியுள்ளது.
டீல்
அமராவதியில் சந்திரபாபு நாயுடு - பவன் கல்யாண் மெகா டீல்
இதனைத் தொடர்ந்து, ஆந்திர முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சி (TDP) தலைவருமான சந்திரபாபு நாயுடு, ஜனசேனா கட்சித் தலைவர் (JSP) பவன் கல்யாண் மற்றும் மாநில பாஜக தலைவர்கள் பங்கேற்ற அவசர ஆலோசனை கூட்டம் வியாழக்கிழமை அமராவதியில் நடைபெற்றது. அண்ணாமலையின் விலகல் முடிவைத் தொடர்ந்து, அங்குள்ள 4 ராஜ்யசபா இடங்களுக்கான புதிய பங்கீட்டு ஃபார்முலா இறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தெலுங்கு தேசம் கட்சிக்கு 3 இடங்களும், ஜனசேனா கட்சிக்கு 1 இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. முந்தைய திட்டத்தின்படி TDP-க்கு 2, ஜனசேனா மற்றும் பாஜகவிற்கு தலா 1 இடங்கள் என முடிவாகியிருந்தது. ஆனால் தற்போதைய அரசியல் மாற்றங்களால் பாஜக தனது உரிமையைக் கைவிட்டுள்ளதால், அந்த இடம் TDP கட்சிக்குக் கூடுதல் லாபமாக மாறியுள்ளது.