LOADING...
அண்ணாமலையின் புதிய அரசியல் பயணம் உறுதி? நாளை வெளியாகிறதா அறிவிப்பு?
தனக்கென ஒரு புதிய அரசியல் பாதையைத் தேர்ந்தெடுக்கத் துணிந்துள்ளார் அண்ணாமலை

அண்ணாமலையின் புதிய அரசியல் பயணம் உறுதி? நாளை வெளியாகிறதா அறிவிப்பு?

எழுதியவர் Venkatalakshmi V
Jun 04, 2026
08:58 am

செய்தி முன்னோட்டம்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின், தமிழக பாரதிய ஜனதா கட்சிக்குள் புகைந்து கொண்டிருந்த உட்கட்சிப் பூசல்களும் கருத்து வேறுபாடுகளும் தற்போது உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளன. தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை, கட்சியிலிருந்து முழுமையாக விலகி தனக்கென ஒரு புதிய அரசியல் பாதையைத் தேர்ந்தெடுக்கத் துணிந்துள்ளார். தனது பிறந்தநாளான இன்று (ஜூன் 4) இறுதி முடிவை எடுத்துள்ள அவர், நாளை வெள்ளிக்கிழமை (ஜூன் 5) சென்னையில் நடத்தவுள்ள செய்தியாளர் சந்திப்பில் தனது புதிய அரசியல் இயக்கம் குறித்த அதிரடி அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பேச்சுவார்த்தை

டெல்லி சமரசப் பேச்சுவார்த்தை தோல்வி

இரு தினங்களுக்கு முன், அண்ணாமலை திடீரென டெல்லிக்கு அவசரப் பயணம் மேற்கொண்டார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் கட்சியின் முக்கியத் தலைவர்களுடன் பலகட்ட சமரசப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. அண்ணாமலையை தொடர்ந்து கட்சியிலேயே தக்கவைத்துக் கொள்ளும் பொருட்டு, அவருக்குத் தேசிய அளவில் முக்கியப் பொறுப்புகள் வழங்க மேலிடம் முன்வந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் கட்சியின் உள்விவகாரங்கள் குறித்து அண்ணாமலை முன்வைத்த சில அதிரடி நிபந்தனைகளையும், தற்போதைய மாநிலத் தலைமை குறித்த புகார்களையும் ஏற்க டெல்லி மூத்த தலைவர்கள் மறுத்துவிட்டனர். இதன் காரணமாக, "பாஜகவில் நீடித்து ஓரங்கட்டப்படுவதை விட, தனி வழியில் செல்வதே சிறந்தது" என்ற தீர்க்கமான முடிவுக்கு அண்ணாமலை வந்துள்ளார்.

பிளான்

விஜய்க்கு போட்டியாக 'We The Leaders' இயக்கம்?

எனினும், ஊடக செய்திகளின்படி, நாளை அண்ணாமலை தனிக்கட்சியை உடனடியாக அறிவிக்கப் போவதில்லை என்று அவரது நெருங்கிய ஆதரவுக் வட்டாரங்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதற்குப் பதிலாக, அவர் ஏற்கனவே தொடங்கி வைத்துள்ள "We The Leaders" என்ற NGO மூலம் முதற்கட்டமாக ஒரு வலுவான மக்கள் இயக்கத்தை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளார். நாளை நடக்கும் ஊடக சந்திப்பில் 'We The Leaders' அமைப்பை முழு அளவிலான அரசியல் இயக்கமாக மாற்றுவதற்கான பிரகடனத்தை வெளியிடுகிறார் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஒன்றரை ஆண்டுகள் இந்த இயக்கத்தின் கீழ் இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்களை மாநிலம் முழுவதும் ஒன்றிணைக்கத் திட்டமிட்டுள்ளார். அவர்களுக்கு முறையான அரசியல் பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன. இயக்கம் வலுவடைந்த பின்னர், அது முறையான புதிய அரசியல் கட்சியாக உருவெடுக்கும்.

Advertisement