LOADING...
அண்ணாமலை பாஜகவிலிருந்து ராஜினாமா: தேசிய தலைவர் நிதினிடம் கடிதம் ஒப்படைப்பு
அண்ணாமலை பாஜகவிலிருந்து ராஜினாமா

அண்ணாமலை பாஜகவிலிருந்து ராஜினாமா: தேசிய தலைவர் நிதினிடம் கடிதம் ஒப்படைப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Jun 02, 2026
02:16 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக அரசியலில் மிக முக்கியத் திருப்புமுனையாக, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, கட்சியிலிருந்து விலகுவதாகத் தனது ராஜினாமா கடிதத்தை டெல்லியில் சமர்ப்பித்துள்ளார். டெல்லியில் இன்று பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை நேரில் சந்தித்த அண்ணாமலை, தனது விலகல் கடிதத்தை முறைப்படி ஒப்படைத்ததாக News18 செய்தி வெளியிட்டுள்ளது. பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் மற்றும் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் ஆகியோரைச் சந்தித்த அண்ணாமலை, சுமுகமான முறையில் கட்சியிலிருந்து விலக விரும்புவதாகத் தெரிவித்தார். "தனது அரசியல் பாதையை இனி சுயாதீனமாக தீர்மானிக்க விரும்புவதாக" அவர் மேலிடத்திடம் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

புகார்

தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார்கள்

அண்ணாமலையைத் தக்கவைக்க அவருக்கு மாநிலங்களவை எம்பி (Rajya Sabha MP) பதவி அல்லது தேசிய அளவில் முக்கியப் பொறுப்பு வழங்க பாஜக தலைமை முயன்றபோதிலும், அவர் அவற்றை ஏற்க மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. இந்தச் சந்திப்பின் போது, தமிழக பாஜகவின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் உட்கட்சி அரசியல் குறித்து அண்ணாமலை அடுக்கடுக்கான புகார்களை வாசித்துள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, அண்ணாமலை மாற்றப்பட்டு நயினார் நாகேந்திரன் தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு, கட்சிக்காக உழைத்த தீவிர ஆதரவாளர்கள் ஓரங்கட்டப்பட்டது மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தலில் கட்சியின் வியூகங்களில் ஏற்பட்ட தோல்விகள் குறித்தும் அவர் தனது அதிருப்தியைப் பதிவு செய்துள்ளார். கோயம்புத்தூர் தொகுதியில் தான் போட்டியிட விரும்பியும் தலைமை அதற்கு வாய்ப்பளிக்காதது, இந்த முடிவுக்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

புதிய கணக்கு

விஜய்யின் எழுச்சியும், அண்ணாமலையின் புதிய கணக்கும்

திரைத்துறையிலிருந்து அரசியல் களம் புகுந்து குறுகிய காலத்தில் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நடிகர் விஜய்யின் அதிரடி வரவுக்குப் பின், தமிழகத்தின் அரசியல் களம் முற்றிலும் மாறிவிட்டதாக அண்ணாமலை நம்புகிறார். "திராவிட சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது, வெறும் மொழி அரசியல் இனி வேலைக்காவது; தற்போது விஜய்யை எதிர்த்து அரசியல் செய்யத் தகுதியான மாற்றுத் தலைவர்கள் யாரும் இல்லை" என்று அண்ணாமலை தனது நெருங்கிய வட்டாரத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனால், உடனடியாக புதிய கட்சி தொடங்காமல், முதலில் ஒரு "மக்கள் இயக்கம்" தொடங்கி தமிழகம் முழுவதும் ஆதரவைத் திரட்ட அவர் திட்டமிட்டுள்ளார். டெல்லி மேலிடம் அண்ணாமலையைத் தற்போதைக்கு டெல்லியை விட்டுப் புறப்பட வேண்டாம் என்றும், மாலை 4 மணிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசவும் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement