LOADING...
பாஜகவிலிருந்து விலகி புதிய கட்சி தொடங்குகிறாரா அண்ணாமலை? தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு!
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை புதிய இயக்கம் தொடங்க உள்ளதாகத் தகவல்

பாஜகவிலிருந்து விலகி புதிய கட்சி தொடங்குகிறாரா அண்ணாமலை? தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு!

எழுதியவர் Sekar Chinnappan
Jun 01, 2026
06:07 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான அண்ணாமலை, விரைவில் 'மக்கள் சக்தி இயக்கம்' என்ற புதிய அமைப்பைத் தொடங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சட்டசபைத் தேர்தலில் கூட்டணிப் பேச்சுவார்த்தை மற்றும் பாஜக மேலிடத்தின் முடிவுகளால் அண்ணாமலைக்கு சீட் மறுக்கப்பட்டு, கட்சிப் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டார். தற்பொழுது விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்துள்ள சூழலில், அண்ணாமலை தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வாகத் தனி அமைப்பை நோக்கித் திட்டமிட்டு வருகிறார்.

அண்ணாமலை புதிய இயக்கம் குறித்த விபரங்கள்

அண்ணாமலையின் புதிய இயக்கம் மற்றும் தமிழக அரசியலில் கிளம்பியுள்ள புதிய பரபரப்பு

தமிழக பாஜாகவின் முன்னாள் தலைவரான கே அண்ணாமலை, மாநிலத்தில் 'மக்கள் சக்தி இயக்கம்' என்ற பெயரில் ஒரு புதிய இயக்கத்தைத் தொடங்க உள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அமைப்பின் மூலம் ஒத்த கருத்துடைய நபர்களை ஒன்றிணைத்து, வலுவான ஒரு தன்னார்வலர் தளத்தைக் கட்டமைப்பதே அவரது முக்கிய நோக்கமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. தற்பொழுது நடிகர் விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்துள்ள சூழலில், பாஜகவில் ஓரம் கட்டப்பட்டுள்ள அண்ணாமலையின் இந்த அடுத்தகட்ட அதிரடி நகர்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

பாஜக தலைவர் பதவி மாற்றம் பின்னணி

கூட்டணி முறிவு மற்றும் பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கம்

கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரக் களத்தில் அண்ணாமலை, அண்ணா மற்றும் ஜெயலலிதா குறித்துப் பேசிய சர்ச்சைக்குரிய கருத்துகளால் பாஜகவின் முக்கியக் கூட்டணியான அதிமுக பிரிந்து சென்றது. மீண்டும் கூட்டணி அமைப்பதற்காக, அண்ணாமலையைத் தலைவர் பதவியிலிருந்து மாற்ற வேண்டும் என்ற நிபந்தனையை எடப்பாடி பழனிசாமி முன்வைத்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகவே அண்ணாமலைக்குத் தேர்தல் சீட் மறுக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக நயினார் நாகேந்திரன் தமிழக பாஜகவின் புதிய மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

அண்ணாமலையின் அரசியல் எதிர்காலம் குறித்த கேள்வி

பாஜகவின் அசுர வளர்ச்சிக்குக் காரணமான அண்ணாமலை தற்பொழுது ஓரங்கட்டப்பட்டது ஏன்?

கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக ஒரு சீட் கூட வெல்லாவிட்டாலும், அக்கட்சியின் வாக்கு வங்கியை இரட்டை இலக்கத்திற்கு உயர்த்திய பெருமை அண்ணாமலையையே சாரும். திராவிடக் கட்சிகளைச் சாராமல் பாஜாகவிற்குத் தனி அடித்தளம் அமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட 41 வயதான அண்ணாமலை, தற்பொழுது பாஜக மேலிடத்தால் தேர்தல் பிரச்சாரங்களில் கூட சேர்க்கப்படவில்லை. டெல்லி மேலிடத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் கூட்டணி அரசியலின் கட்டாயத்தால் முற்றிலும் ஓரங்கட்டப்பட்டுள்ள அண்ணாமலையின் அரசியல் எதிர்காலம் தற்பொழுது கேள்விக்குறியாக மாறியுள்ளது.

Advertisement