'We the leaders': BJP-யிலிருந்து விலகியதும், தனி கட்சி ஆரம்பிக்க போவது குறித்து அறிவித்தார் அண்ணாமலை
செய்தி முன்னோட்டம்
கடந்த சில நாட்களாக நிலவி வந்த தீவிர அரசியல் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை கட்சியில் இருந்து முறைப்படி விலகியுள்ளார். அந்த அறிவிப்பு வெளியானதும், தன்னுடைய தனிப்பாதை குறித்து வெளிப்படுத்தியுள்ளார். டெல்லி மேலிடத்துடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, சமூக வலைத்தளம் வாயிலாகத் தனது விலகல் முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள அண்ணாமலை, தமிழகத்தில் தனிநபர் வழிபாட்டு அரசியலை ஒழிப்பதற்காக 'வி தி லீடர்' (We The Leader) என்ற புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார். அண்ணாமலையின் இந்த அதிரடி முடிவு, தமிழக அரசியல் களத்தில் அடுத்தகட்ட புதிய கூட்டணிகள் மற்றும் அரசியல் மாற்றங்களுக்கான பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
An Important Announcement https://t.co/IcEnfaZGRK
— K.Annamalai (@annamalai_k) June 5, 2026
மோதல்
விலகலுக்கான உண்மையான பின்னணி
அவரது ராஜினாமா கடிதம் மற்றும் வீடியோ பதிவில் விலகலுக்கான காரணங்களை ஓப்பனாக உடைத்துள்ளார். தமிழகத்தில் பா.ஜ.க எந்தவொரு பெரிய கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதில் அண்ணாமலை உறுதியாக இருந்தார். ஆனால், தேசியத் தலைமை அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைக்க முடிவெடுத்தது. இந்தத் தேர்தல் உத்தியில் ஏற்பட்ட கடுமையான கருத்து வேறுபாடு காரணமாகவே அவர் கட்சியை விட்டு வெளியேறியுள்ளார். மேலும் இந்த முடிவு அவசரத்தில் எடுக்கப்பட்டதல்ல என்று குறிப்பிட்டுள்ள அண்ணாமலை, "கடந்த 2025 டிசம்பர் 4-ஆம் தேதியே நான் பா.ஜ.க-விலிருந்து விலகும் எண்ணத்தை டெல்லி தலைமையிடம் தெரிவித்துவிட்டேன். ஆனால், தேர்தல் பணிகளை முடித்துக் கொடுக்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டதால் இதுவரை நீடித்தேன்" என விளக்கியுள்ளார்.
ரஜினிகாந்த்
2020-ல் ரஜினிகாந்த் கொடுத்த 'நோட்'.. மறுத்த அண்ணாமலை
அண்ணாமலை வெளியிட்டுள்ள விளக்கத்தில் மிக முக்கியமாக இடம்பெற்றிருந்த தகவல், நடிகர் ரஜினிகாந்த் தொடர்பானதுதான். கடந்த 2020 ஆகஸ்ட் 25-ல் அண்ணாமலை பா.ஜ.க-வில் இணைந்தார். அதற்கு முந்தைய நாள், ரஜினிகாந்த் இவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தான் தொடங்கவிருந்த அரசியல் இயக்கத்தில் இணையுமாறு அழைப்பு விடுத்துள்ளார். "அப்போது ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது தமிழகத்திற்கு நல்லது என்ற எண்ணம் எனக்குள் இருந்தது. ஆனால், அந்த காலகட்டத்தில் அவருடைய உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அவர் அரசியலுக்கு வராமல் இருப்பதே அவருக்கு நல்லது என்று நான் நினைத்தேன். மேலும், பா.ஜ.க தேசியத் தலைவர்களுக்கு அதற்கு முன்பே நான் வாக்குறுதி அளித்திருந்ததால், ரஜினிகாந்திடம் மன்னிப்பு கேட்டு அவரது அழைப்பை ஏற்க முடியாது எனக் கூறிவிட்டேன்" என்று பழைய ரகசியத்தை உடைத்துள்ளார்.
இயக்கம்
'வி தி லீடர்' இயக்கம்: அண்ணாமலையின் புதிய அரசியல் பாதை
கடந்த 2019-ல் IPS பதவியை ராஜினாமா செய்த பிறகு அண்ணாமலை நடத்தி வந்த 'வி தி லீடர்ஸ் ஃபவுண்டேஷன்' என்ற தன்னார்வ அமைப்பே, தற்போது புதிய அரசியல் இயக்கமாக உருவெடுத்துள்ளது. இவ்வியக்கம் குறித்துப் பேசிய அவர்,"அரசியல் என்பது ஏதோ ஒரு குறிப்பிட்ட குடும்பத்திற்கோ அல்லது தனிநபருக்கோ சொந்தமானது அல்ல. நிரந்தர எம்பிக்கள், நிரந்தர எம்எல்ஏக்கள் என்ற பிம்பத்தை நாம் உடைக்க வேண்டும். 'வி தி லீடர்' இயக்கம் எதிர்காலத்தில் அரசியல் கட்சியாக மாற்றப்பட்டு, அடுத்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் போட்டியிடும்"* என முழங்கியுள்ளார். தமிழகத்தில் த.வெ.க ஆட்சி அமைத்துள்ள சூழலில், பா.ஜ.க-வின் முகமாக இருந்த அண்ணாமலையின் இந்த இயக்க அறிவிப்பு தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய பலமுனைப் போட்டிக்கு வழிவகுத்துள்ளது.