Page Loader
இலங்கைக்கு 3 நாள் பயணமாக செல்லும் எல்.முருகன் மற்றும் அண்ணாமலை
இலங்கைக்கு 3 நாள் பயணமாக செல்லும் எல்.முருகன் மற்றும் அண்ணாமலை

இலங்கைக்கு 3 நாள் பயணமாக செல்லும் எல்.முருகன் மற்றும் அண்ணாமலை

எழுதியவர் Nivetha P
Feb 09, 2023
05:27 pm

செய்தி முன்னோட்டம்

இலங்கை பயணம்:கடந்த 2015ம் ஆண்டு பிரதமர் மோடி அவர்கள் யாழ்ப்பாணம் கலாச்சார மைய கட்டிடத்தினை கட்ட அடிக்கல் நாட்டினார். இப்பொழுது அந்த கலாச்சார மைய கட்டிடத்தின் திறப்பு விழா இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங் தலைமையில் வரும் பிப்ரவரி 11ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த கட்டிடம் 11 தளங்களுடன், 600 நபர்கள் அமரும் வகையில் திரையரங்குடன் கூடிய அரங்குகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் நிதி உதவியோடு அமைக்கப்பட்டுள்ள இதன் திறப்புவிழா நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பா.ஜ.க.மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். இதனை தொடர்ந்து வேறு சில நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க திட்டமிட்டு இவர்கள் இருவரும் 3 நாள் பயணமாக இலங்கைக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளம்பி சென்றுள்ளனர்.

எல்.முருகன் பேட்டி

தமிழக மீனவர்களின் படகுகள் அடிக்கடி சிறைபிடிக்கப்படும் விவகாரம் குறித்து பேசப்படும்

இந்த இலங்கை பயணம் குறித்து சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் செய்தியாளர்களை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், இந்த இலங்கை பயணத்தில் தமிழக மீனவர்களின் படகுகள் அடிக்கடி இலங்கை அரசால் சிறைபிடிக்கப்படுவது குறித்து பேசபடும் என்று கூறினார். மேலும், தமிழ் அமைப்புகளின் தலைவர்களை சந்திப்பதற்கும் வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்தார். தொடர்ந்து, இந்தியா-இலங்கை இடையே கூட்டு கட்டத்தை மீண்டும் நடத்துவது குறித்தும் இலங்கை அரசு அதிகாரிகளிடம் பேசவிருப்பதாக தெரிவித்துள்ளார். இதனிடையே இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில் கடந்த 1987ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 13ம் அரசியல் திருத்த சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவது குறித்தும் மத்திய இணை அமைச்சரான எல்.முருகன் பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.