ஆந்திரா ரயில் விபத்து: 13 பேர் மரணம், 40க்கும் மேற்பட்டோர் காயம் எனத்தகவல்
நேற்று மாலை, ஆந்திரா அருகே, ஹவுரா-சென்னை வழித்தடத்தில் வந்து கொண்டிருந்த பயணிகள் ரயில் ஒன்று, சிக்னல்-ஐ கவனிக்காமல் சென்றதில், அதே தடத்தில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு பயணிகள் ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், தற்போது வரை, 13 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தைத் தொடர்ந்து, அந்த வழித்தடத்தில் வரவேண்டிய 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன மற்றும் 22 ரயில்கள் திருப்பி விடப்பட்டன என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.விசாகப்பட்டினம்-பலாசா இடையே, சென்ற ஒரு சிறப்பு பயணிகள் ரயில், சிக்னலுக்காக அலமண்டா மற்றும் கண்டகபள்ளே இடையே தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டபோது, பின்னால் வந்த வைசாக்-ராய்காட் பயணிகள் ரயில் மோதியது. இந்த விபத்தில் 3 பெட்டிகள் தடம் புரண்டன.
மனித பிழையினால் ஏற்பட்ட விபத்து என தகவல்
மனிதப்பிழையின் விளைவாக இந்த கோர சம்பவம் ஏற்பட்டதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிவப்பு சிக்னலை பின்னால் வந்த ரயிலின் டிரைவர் கவனிக்க தவறியதால், இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த 40 பேரும் ஆந்திராவை சேர்ந்தவர்கள். அவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என விஜயநகரம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், விபத்தில், 13 பேர் உயிரிழந்ததை இன்று காலை விஜயநகரம் கலெக்டர் நாகலட்சுமி உறுதி செய்தார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் எனவும், பலத்தகாயம் அடைந்தவர்களுக்கு ₹2.5 லட்சமும், சிறிய காயம் அடைந்த பயணிகளுக்கு ₹50,000ம் வழங்கப்படும் எனவும் ரயில்வே அமைச்சர் அறிவித்துள்ளார்.