தனியொரு நபரால் திருடப்பட்ட 114 கிலோ எடைகொண்ட புராதன புத்தர் சிலை - க்ரைம் ஸ்டோரி
இந்தவார Newsbytes.,இன் க்ரைம் ஸ்டோரி: அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸில் சுமார் 1.5 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பிற்கு ரூ.12.5 கோடி மதிப்புள்ள பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த ஜப்பானிய நாட்டினை சேர்ந்த வெண்கல புத்தர் சிலை ஒன்று கலை பொருட்கள் வைக்கப்பட்டுள்ள அரங்கில் இருந்து கடந்த வாரம் திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்த செய்திகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
செப்டம்பர் 18ம் தேதி அதிகாலை 3.45 மணியளவில் அரங்கேறிய சம்பவம்
அதன்படி, இது குறித்து காவல்துறையினர், சுமார் 250 பவுண்டுகள் அதாவது 114 கிலோ எடைகொண்ட அந்த சிலை பெவர்லி குரோவில் பரகத் என்னும் கேலரியில் கடந்த செப்டம்பர் 18ம் தேதி அதிகாலை 3.45 மணியளவில் திருடப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் மிக தெளிவாக சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள நிலையில், அதனை பார்த்த காவல்துறையினர் ஆச்சர்யம் அடைந்தனர் என்பது குறிப்பிடவேண்டியவை.
சிசிடிவி பதிவுகளை கண்டு ஆச்சர்யத்தில் ஆழ்ந்த காவல்துறை
சிசிடிவி பதிவில், சந்தேகத்திற்குட்பட்ட நபர் ஒருவர் ஒரு ட்ரைவ்வே கேட் மூலம் நுழைவு வாயிலை உடைத்து, அந்த 114 கிலோ எடைகொண்ட புத்தர் சிலையினை ஒரு ட்ரக்கில் நகர்த்த ஓர் டிராலியை பயன்படுத்தியுள்ளார். தனி ஒரு நபராக இந்த கொள்ளை சம்பவத்தினை அந்த நபர் வெறும் 25 நிமிடத்தில் செய்து முடித்தது ஆச்சரியமளிக்கிறது. திருடுபோன சிலை ஜப்பானின் 1603-1867 எடோ காலத்தின் போது உருவாக்கப்பட்டது என்றும், ஒளிவட்டத்துடன் சுமார் 4 அடி உயரமுள்ள அந்த புத்தர் சிலை அரிய வகையான கலைப்பொருட்களுள் ஒன்று என்றும் கூறப்படுகிறது.
முன்னொரு காலத்தில் கோயிலில் இடம்பெற்றிருக்கலாம்
அதேபோல் முந்தைய காலங்களில் இந்த சிலை கோயிலில் வைத்திருக்க கூடும் என்றும் கூறப்படுகிறது. தொடர்ந்து, இந்த சிலையானது பூமி, நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் உள்ளிட்ட 5 உலக கூறுகள் கொண்ட ஆன்மீக உணர்வுடன், ஒருமைப்பாட்டினையும் குறிக்கும் வண்ணம் வடிக்கப்பட்டுள்ளது. சந்தையில் இதுபேன்ற சிலை வேறெங்கும் இல்லை என்று அந்த கலை அரங்க உரிமையாளர் கூறியுள்ளார். இந்நிலையில் காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ளதோடு, மேலும் சில பாதுகாப்பு கேமரா பதிவுகளுக்கான சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
திருட்டுப்போன கலையரங்கம் 2017ல் திறக்கப்பட்டதென தகவல்
இந்த திருட்டு சம்பவம் நடந்துள்ள பரகாத் கேலரி, லண்டன், ஹாங்காங், சியோட் உள்ளிட்ட நாடுகளில் ஏற்கனவே உள்ள நிலையில் கடந்த 2017ம் ஆண்டு தான் அமெரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தனது கிளையினை திறந்ததுள்ளது. இந்த கலைப்பொருள் அரங்கத்தில் வெளிப்புறம் முக்கியமான இடத்தில் இந்த சிலை இடம் பிடித்திருந்த நிலையில், இந்த சிலை கடத்தல் சம்பவம் திட்டமிடப்பட்ட கொள்ளை தான் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.