காலிஸ்தான் தலைவர் அம்ரித்பாலின் மனைவி கைது செய்யப்பட்டார்
தப்பியோடிய காலிஸ்தான் தலைவர் அம்ரித்பால் சிங்கின் மனைவி லண்டன் விமானத்தில் ஏறுவதற்கு சென்ற போது கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. "வாரிஸ் பஞ்சாப் தே" என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் கடந்த மாதத்தில் இருந்து பஞ்சாப் காவல்துறையால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அப்போது தப்பியோடிய அந்த அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங் இன்று வரை தலைமறைவாக உள்ளார். இந்நிலையில், அமிர்தசரஸ் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு செல்ல முயன்ற அவரது மனைவியை பஞ்சாப் போலீஸார் தடுத்து காவலில் வைத்துள்ளனர்.
சீக்கியர்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற நோக்கத்தோடு போராடி வரும் அமைப்பு
அம்ரித்பால் சிங் ஒரு தீவிர போதகர் மற்றும் பிரிவினைவாதி ஆவார். சில வாரங்களுக்கு முன், தனது முக்கிய உதவியாளர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக இவர் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். இந்த போராட்டத்தின் போது காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் பெரும் சண்டை ஏற்பட்டது. பஞ்சாபில் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக செயல்பட்டு வரும் இந்த தீவிர பிரிவினைவாத தலைவரை, ஆயுதம் ஏந்திய உதவியாளர்கள் இல்லாமல் பார்க்கவே முடியாது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் சாலை விபத்தில் இறந்த நடிகரும் ஆர்வலருமான தீப் சித்துவால் தொடங்கப்பட்ட "வாரிஸ் பஞ்சாப் தே" என்ற தீவிர அமைப்பிற்கு இவர் தலைவர் ஆவார். இந்த அமைப்பினர் சீக்கியர்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டு வருகின்றனர்.