அமித்ஷா Vs ராகுல் காந்தி: இன்று சூடுபிடிக்க இருக்கும் நம்பிக்கையில்லா தீர்மான விவாதம்
மணிப்பூர் பிரச்சனை மீதான நம்பிக்கையில்லா தீர்மான விவாதம் இன்று 2-வது நாளாக நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இன்று நாடாளுமன்றத்தில் பேச உள்ளனர் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது. பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விவாதத்தை இன்று ராகுல் காந்தி தொடங்கி வைப்பார் என்று காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார். பாஜக எம்பிக்களுடன் ஒப்பிடும் போது எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் மக்களவையில் குறைவாகவே இருக்கின்றனர். அதனால், இதில் கண்டிப்பாக எதிர்கட்சிகளால் வெற்றி பெற முடியாது.
அமித்ஷா, நிர்மலா சீதாராமன் இன்றைய விவாதத்தில் கலந்துகொள்ள வாய்ப்பு
எனினும், பிரதமர் மோடியை மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பேச வைக்க, எதிர்க்கட்சிகள் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளன. இந்த நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்திற்கு பிரதமர் மோடி நாளை பதிலளிக்கவுள்ளார். மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி மற்றும் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோரும் இன்று மக்களவையில் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றைய விவாதத்தில் பங்கேற்ற கிரண் ரிஜிஜு, "தவறான நேரத்தில் மற்றும் தவறான முறையில்" இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டு வந்ததற்கு எதிர்க்கட்சிகள் வருந்தும் என்று தெரிவித்தார். உலக அளவில் இந்தியாவின் தற்போதைய அந்தஸ்தை பற்றி பேசும் போது அவர் இதை கூறினார். இதுதவிர, காங்கிரஸ், திமுக போன்ற எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் நேற்றைய விவாதத்தில் கலந்துகொண்டனர்.