அமர்நாத் யாத்திரை 2026: 5 நாட்களில் உருகிய பனி லிங்கம்; இமயமலையின் காலநிலை மாற்றத்தால் பக்தர்கள் கவலை
செய்தி முன்னோட்டம்
ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆண்டு நடைபெற்ற பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிறகு, இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 3 முதல் பலத்த பாதுகாப்புடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் ஆர்வத்துடன் வருகை தந்து வரும் வேளையில், யாத்திரை தொடங்கிய ஐந்தே நாட்களுக்குள் அமர்நாத் குகையில் உள்ள புனித பனி லிங்கம் 90 சதவீதத்திற்கும் மேல் உருகி மறைந்துவிட்டதாக வெளியாகி இருக்கும் தகவல் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காரணங்கள்
பனி லிங்கம் உருகியதற்கான காரணங்கள் மற்றும் சர்ச்சை
அதிநவீன செயற்கைக்கோள் கண்காணிப்பு மற்றும் நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் இந்த ஆண்டு யாத்திரை தொடங்கிய போதிலும், பனி லிங்கம் இவ்வளவு விரைவாக உருகியது ஏன் என்ற விவாதம் எழுந்துள்ளது. இமயமலைப் பகுதியில் நிலவி வரும் அசாதாரண வெப்பநிலை உயர்வு மற்றும் தீவிர காலநிலை மாற்றம் இதற்கு முதன்மை காரணமாக கூறப்படுகிறது. கடந்த 2018, 2020 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளிலும் பனி லிங்கம் குறிப்பிட்ட நாட்களுக்குள் உருகியிருந்தாலும், இந்த ஆண்டு மிக விரைவாக உருகியுள்ளது சுற்றுசூழல் ஆர்வலர்களை கவலையடையச் செய்துள்ளது.
கோரிக்கை
அரசியல் தலைவர்களின் கோரிக்கையும் உச்ச நீதிமன்ற விதியும்
பனி லிங்கம் உருகி வரும் செயற்கைக்கோள் புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள மக்கள் ஜனநாயகக் கட்சியின் (PDP) இளம் தலைவர் இல்திஜா முஃப்தி, குகைப்பகுதியின் சூழலியல் பாதிப்பு குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, நாளொன்றுக்கு இரு வழிகளிலும் தலா 10,000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால், தற்பொழுது முறையான அனுமதியின்றி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதால் குகையின் உள்ளூர் நுண்காலநிலை பாதிக்கப்பட்டு பனி உருகுவது வேகமடைவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
உள்கட்டமைப்பு
உள்கட்டமைப்பு விரிவாக்கமும் சூழலியல் அச்சமும்
அமர்நாத் குகைப் பகுதியைச் சுற்றியுள்ள சாலைகள் அகலப்படுத்தப்பட்டது, நவீன விளக்குகள் மற்றும் குகைக்கு அருகில் அண்மையில் அமைக்கப்பட்ட மழைக்கால தங்குமிடம் ஆகியவையே இந்த விரைவான பனி உருகுதலுக்குக் காரணம் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அஷ்வானி ஹாண்டா தெரிவித்துள்ளார். இதுகுறித்து முறையான அறிவியல் பூர்வ ஆய்வை மேற்கொள்ள ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்காவுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், மத்திய அரசு இப்பகுதியில் கொண்டு வரத் திட்டமிட்டுள்ள புதிய ரோப்வே திட்டத்திற்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தங்களின் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.