கொரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி -அமைச்சர் மா.சுப்பிரமணியம் உறுதி
கடந்த 2019-2020 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடியது. அப்போது மருத்துவமனைகளில் செவிலியர்கள் போதுமான அளவில் இல்லை என்பதால் தற்காலிக செவிலியர்களை அப்போதைய அதிமுக அரசு உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தின் விதிமுறைகள் மற்றும் விகிதாசாரங்களை பின்பற்றாமல் பணியமர்த்தியது. விகிதாசாரங்கள் எதையும் பின்பற்றாமல் பணியில் சேர்ந்த செவிலியர்களை 2022 ஆம் ஆண்டு பணி நீக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட துவங்கினர். இதனையடுத்து, "ஆபத்து காலத்தில் உதவிய ஒப்பந்த செவிலியர்களை திமுக அரசு நட்டாற்றில் விட்டுள்ளது. கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களை தமிழக அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும்" என்று எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தெரிவித்தார்.
பணி நீக்கம் செய்தது நீதிமன்ற உத்தரவு காரணமாகவே தவிர, அது அரசின் நோக்கமல்ல-மா.சுப்பிரமணியம்
இது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், "கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது நீதிமன்ற உத்தரவால் தானே தவிர, அது தமிழக அரசின் நோக்கம் அல்ல. பொது சுகாதாரத்துறையில் 2200 காலியிடங்கள், 'மக்களை தேடி மருத்துவம்' இடைநிலை சுகாதார சேவைக்காக உள்ள 270 காலியிடங்கள் போன்ற சுகாதாரத்துறையில் உள்ள காலியிடங்களில் இந்த செவிலியர்கள் நிரப்பப்படுவார்கள். கொரோனா காலத்தில் பணியாற்றியதால் மாற்றுப்பணி வழங்கப்படவுள்ளது. ரூ.14,000 வாங்கிய இவர்கள் ஊதியம் ரூ.18,000ஆக உயரவுள்ளது. பணி நிரந்தரம் சாத்யமில்லையென்பதை செவிலியர்கள் உணர வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.