அல்லு அர்ஜுன் vs ஹைதராபாத் போலீஸ்: தியேட்டர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் இதுவரை நடந்தவை
டிசம்பர் 4ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கிற்கு வெளியே 'புஷ்பா 2' பிரீமியர் காட்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் இறந்த விவகாரத்தில் தொடர்ந்து சர்ச்சைகள் நிலவி வருகின்றன. இந்த சம்பவத்தில், அல்லு அர்ஜுன், 2 வாரங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு, ஒருநாள் சிறையில் கழித்தபின், பெயிலில் வெளிவந்தார். இந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுன் தரப்பும், காவல்துறையினரும் மாறிமாறி தங்கள் சார்பு விவாதங்களை பத்திரிகையாளர் முன்னிலையில் வைக்க, தற்போது தெலுங்கானா மாநிலம் முழுவதும் கொந்தளிப்பில் உள்ளது. அல்லு அர்ஜுன் ரசிகர்கள் முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிவரும் நேரத்தில், இறந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு நியாயம் வேண்டி, நேற்று அல்லு அர்ஜுன் வீட்டின் மீது ஒருசிலர் கல்லெறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
CCTV காட்சிகளை வெளியிட்ட தெலுங்கானா காவல்துறை தரப்பு
ஹைதராபாத் காவல்துறை திரையரங்கிலிருந்து பெறப்பட்ட சிசிடிவி காட்சிகளைப் பகிர்ந்து கொண்டது. திரையரங்கில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது என்றும், இதனால் பெண் ஒருவர் பலியானார் என்றும், அதனால் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் எனவும் அல்லு அர்ஜுனிடம் கூறப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். அதன்பின்னர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வளாகத்தில் இருந்து அல்லு அர்ஜுனும், அவரது குழுவினரும் வெளியேறிய CCTV காட்சிகளை வெளியிட்டனர். ஆரம்பத்தில் நடிகரை நேரில் சந்திக்க அல்லு அர்ஜுன் PA அனுமதிக்கவில்லை என்றும் மூத்த போலீஸ் அதிகாரி குற்றம் சாட்டினார். இதற்கு ஒருநாள் முன்னதாக தான் செய்தியாளர் சந்திப்பின் போது அல்லு அர்ஜுன் எந்த ஒரு போலீஸ்காரரும் தன்னை வெளியேறச் சொல்ல தியேட்டரில் தன்னை அணுகவில்லை என்று வலியுறுத்தினார்.
Twitter Post
அரசு தரப்பிலும் அல்லு அர்ஜுனுக்கு முன்னரே கூறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது
"அல்லு அர்ஜுன் மேலாளர் சந்தோஷிடம், மரணம் குறித்து முதலில் தகவல் தெரிவிக்கப்பட்டது. நாங்கள் அவரிடம் நிலைமை கட்டுக்கடங்காமல் போய்விட்டதாகவும், ஒரு சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறினோம். சந்தோஷ் மற்றும் பலர் எங்களை நடிகரை சந்திக்க அனுமதிக்கவில்லை" என்று ஏசிபி ரமேஷ் கூறினார். காவல்துறை அனுமதி மறுக்கப்பட்ட போதிலும், அல்லு அர்ஜுன் முதல்வருக்காக தியேட்டருக்கு வந்ததாக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும் கூறியுள்ளார். இதனை ஆமோதித்து காவல்துறை தரப்பிலும், கூட்டத்தை கட்டுப்படுத்துவதில் உள்ள கவலைகளை காரணம் காட்டி, காவல்துறை நடிகர்கள் வருகைக்கு அனுமதி மறுக்கப்பட்டது என கூறினர். இதனை நேற்றும் செய்தியாளர் சந்திப்பில் கூறினர். திரையரங்க உரிமையாளர்கள் இதனை படக்குழுவினரிடம் தெரியப்படுத்தியிருக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
அல்லு அர்ஜுன் கூறியது என்ன?
எனினும் அல்லு அர்ஜுன் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்தார். காவல்துறை அனுமதி மறுத்திருந்தால், தன்னை எப்படி திரையரங்கிற்குள் நுழைய வழி ஏற்படுத்தி தருவார்கள் என அவர் கேள்வி கேட்டார். "அது உண்மையல்ல, உண்மையில், போலீசார் எனக்கு வழியை ஏற்படுத்தி தந்து, அவர்களின் வழிகாட்டுதலின்படி நான் திரையரங்கிற்குள் வந்தேன்" என்று கூறினார். மேலும் அவர், ஒரே நாளில் தான் இத்தனை ஆண்டுகள் சேர்த்த நற்பெயர் அனைத்தும் உடைந்து விட்டது எனவும், தன்னுடைய நற்பெயருக்கும், தன்னுடைய குணத்தை கேள்வி கேட்கும் வகையில் சம்பவங்கள் சித்தரிக்கப்படுகிறது என்றும் அல்லு அர்ஜுன் கூறினார். இந்த விவகாரத்தில் தான் யாரையும் குறை கூற விரும்பவில்லை எனவும் அவர் அழுத்தமாக பதிவிட்டார்.