தருமபுரி அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலந்துள்ளதாக புகார்
தமிழ்நாடு மாநிலம் தருமபுரி, பென்னாகரம் பகுதியிலுள்ள பனைக்குளத்தில் அரசு நடுநிலை பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 120க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் மாணவிகள் பயின்று வருகின்றனர் என்று கூறப்படுகிறது. இப்பள்ளியில் வைக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கான சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியில் ஏதோ துர்நாற்றம் வீசுவதாக மாணவர்கள் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதன் பேரில், அந்த பள்ளியில் ஆசிரியர் கணேசன் என்பவர் அந்த குடிநீர் தொட்டியினை ஆய்வு செய்துள்ளார். அதில் அந்த தொட்டியில் மனித கழிவுகள்(மலம்) கலந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து உடனே அந்த குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த செயலில் ஈடுபட்ட மர்ம நபர் நிச்சயம் தண்டிக்கப்படுவார் என்று காவல்துறை உறுதி
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தகவலறிந்து அந்த பள்ளிக்கு விரைந்து வந்த பாப்பாரப்பட்டி காவல்துறை, பென்னாகரம் வட்டாரத்தின் கலவி அலுவலர் துளசி ராமன் உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டனர் என்று செய்திகள் தெரிவிக்கிறது. உண்மையில் அந்த குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்டது மனித மலம் தானா? அல்லது குரங்கு போன்ற வேறு விலங்குகளின் மலமா? என்று விசாரிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலந்து துர்நாற்றம் வீசியது என்ற செய்தி தற்போது பெரும் அதிர்ச்சியினை தமிழகம் முழுவதும் ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலில் ஈடுபட்ட அந்த மர்ம நபர் நிச்சயம் கண்டறியப்பட்டு, கடுமையாக தண்டிக்கப்படுவார் என்று காவல்துறை உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.