டெட்ரா பாக்கெட்டில் மது விற்பனை - அமைச்சர் முத்துசாமி விளக்கம்
தமிழ்நாடு மாநிலத்தில், சமீப காலமாக டாஸ்மாக் விற்பனை குறைந்ததாக கூறப்பட்டதையடுத்து, அதுகுறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதில், 180மில்லி லிட்டர் மதுவினை இரண்டாக பிரித்து குடிப்பதற்கே ஒரு தனி கூட்டம் கடையின் வாசலில் காத்திருக்கிறது என்பது தெரியவந்தது. இதனால் 90மி.லிட்டர் கொண்ட டெட்ரா பாக்கெட்டில் மது விற்பனை செய்யலாம் என்று அமைச்சர் முத்துசாமி அண்மையில் கூறியிருந்தார். இதற்கு பெரும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், டெட்ரா பாக்கெட்டில் மது விற்பனை குறித்து கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளதே தவிர இன்னமும் முடிவு எடுக்கவில்லை என்றும், டாஸ்மாக்கில் பல்வேறு பிரச்சனைகள் நிலவும் நிலையில், அரசின் கொள்கையினை கருத்தில் கொண்டு பிரச்சனைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
கோயில்கள் மற்றும் பள்ளிகள் அருகிலுள்ள டாஸ்மாக் கடைகளில் ஆய்வு நடத்த உத்தரவு
தொடர்ந்து, இந்த டெட்ரா பாக்கெட் மது விற்பனை என்பது அரசின் முடிவு அல்ல, விருப்பம் இல்லையெனில் அந்த திட்டம் கைவிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், சிறுவர்கள் மற்றும் வயதானோர் டாஸ்மாக் கடைகளுக்கு வருவதனை தடுத்து அவர்களுக்கான கவுன்சலிங் கொடுக்கப்படவுள்ளது என்றும் கூறியுள்ளார். கோயில்கள் மற்றும் பள்ளிகள் அருகிலுள்ள டாஸ்மாக் கடைகளை மீண்டும் ஒருமுறை ஆய்வுநடத்த தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையினை அதிகரிப்பது தமிழக அரசின் நோக்கம் அல்ல என்று கூறும் அமைச்சர், "டாஸ்மாக் கடைகளில் வருமானம் குறைவதனை கண்காணிப்பது நிஜத்தில் மக்கள் குடிப்பதை நிறுத்தி விட்டார்களா? இல்லை வேறு ஏதேனும் தவறான பாதைக்கு சொல்கிறார்களா? என்பதனை கண்டறியதான்" என்றும் கூறியுள்ளார்.