முதல் ஏர்பஸ் ஏ350-900 விமானத்தை அறிமுகப்படுத்தியது ஏர் இந்தியா
ஏர் இந்தியா தனது முதல் ஏர்பஸ் ஏ350-900 விமானத்தை இன்று அறிமுகப்படுத்தியது. முதன் முதலாக அந்த விமானம் இன்று பெங்களூரில் இருந்து மும்பைக்கு இயக்கப்பட்டது. மேலும், ஏர் இந்தியா லைவரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முதல் விமானமும் இதுவாகும். ஏர் இந்தியா லைவரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள AI 589 விமானம் பெங்களூரின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று புறப்பட்டு மும்பைக்கு சென்றது. அந்த ஏர்பஸ் ஏ350-900 விமானத்தில் புதிய ஏர் இந்தியாவில் பயணிக்க ஆர்வம் இருந்த பயணிகள் ஏற்றி செல்லப்பட்டனர். முதற்கட்டமாக, A350-900 விமானங்கள், பணியாளர் பயிற்சி மற்றும் ஒழுங்குமுறை இணக்கத்திற்காக உள்நாட்டு வழித்தடங்களில் மட்டும் பறக்கவிடப்படும்.
A350-900 விமானத்தின் அம்சங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள்
பெங்களூரு, சென்னை, டெல்லி, ஹைதராபாத் மற்றும் மும்பையிலிருந்து பயணிக்கும் பயணிகள் முதற்கட்டமாக A350 விமானத்தின் அதிநவீன தொழில்நுட்பத்தில் பறக்க முடியும். AI 589 விமானம் செவ்வாய்கிழமை தவிர வாரத்தின் பிற நாட்களில் இயங்க உள்ளது. இந்த பெங்களூரில் இருந்து காலை 7:05 மணிக்கு புறப்பட்டு 8:50 மணிக்கு மும்பையை வந்தடையும். ஏர் இந்தியாவின் A350-900 விமானத்தில் 316 இருக்கைகளுடன் கூடிய மூன்று வகுப்பு பயணிகள் கேபின்கள் இருக்கும். 28 தனியார் வணிக அறைகள், 24 பிரீமியம் எகானமி இருக்கைகள், 264 எகானமி இருக்கைகள் ஆகியவை இதில் அடங்கும். அது போக, முழு தட்டையான படுக்கைகள், கால் வைப்பதற்கான கூடுதல் இடம் மற்றும் கூடுதல் வசதிகள் இந்த விமானத்தில் இருக்கும்.