விமானத்தில் பெண் மீது சிறுநீர் கழித்த நபர் கைது - கைதான ஷங்கர் மிஸ்ராவின் தந்தை பேட்டி
கடந்த நவம்பர் 26ம் தேதி நியூயார்க் நகரில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் ஷங்கர் மிஸ்ரா என்னும் பயணி ஒருவர் போதையில் சக பெண் பயணியின் மீது சிறுநீர் கழித்துள்ளார். இது குறித்து அந்த பெண் பயணி டாடா நிறுவன தலைவருக்கு புகார் கடிதம் அனுப்பிய நிலையில், அவருக்கு 30 நாட்கள் விமானங்களில் பயணிக்க தடை விதிக்கப்பட்டதோடு, போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் அந்த நபரை தீவிரமாக தேடி வந்தார்கள். இந்நிலையில் ஷங்கர் மிஸ்ரா பணிபுரிந்து வந்த அமெரிக்க நிறுவனமான 'வெல்ஸ் போர்கோ', அவர் செய்த செயலை கடுமையாக சாடியதோடு, இது தங்கள் நிறுவனத்திற்கே அவமானம் என்று கூறி ஷங்கர் மிஸ்ராவை பணி நீக்கம் செய்துள்ளார்கள்.
பெங்களூரில் கைதான ஷங்கர் மிஸ்ரா - 'இது போலியான வழக்கு' என்று கூறும் ஷங்கர் மிஸ்ரா தந்தை
இதனை தொடர்ந்து தலைமறைவான ஷங்கர் மிஸ்ரா தனது நண்பர்களை சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்பு கொண்டதோடு, கிரெடிட் கார்டு உபயோகப்படுத்தியதையும் வைத்து போலீசார் அவரை பெங்களூரில் கைது செய்துள்ளனர். இதனையடுத்து, ஷங்கர் மிஸ்ராவின் தந்தை ஷ்யாம் மிஸ்ரா, "எனது மகனுக்கு 34 வயதாகிறது. 72 வயதான பெண்ணிடம் என் மகன் இப்படி அநாகரிகமாக நடந்து கொண்டிருக்க மாட்டான். பயண நாளன்று அவன் 30 மணி நேரம் தூங்காமல் சோர்வாக இருந்துள்ளான். எனவே தூங்கிய அவன், எழுந்த பின்னர் விமான ஊழியர்கள் கூறியபின் தான் இந்த சம்பவம் குறித்து அவனுக்கு தெரியவந்துள்ளது. இது முற்றிலும் போலியான வழக்கு" என்று கூறியுள்ளார்.