LOADING...
தவெக-விற்கு ஆதரவளிக்க 35 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் முடிவு? உடைக்கப்படுகிறதா அதிமுக?
அதிமுக-விற்குள் தற்போது பூகம்பம் வெடிக்கத் தொடங்கியுள்ளது

தவெக-விற்கு ஆதரவளிக்க 35 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் முடிவு? உடைக்கப்படுகிறதா அதிமுக?

எழுதியவர் Venkatalakshmi V
May 06, 2026
10:23 am

செய்தி முன்னோட்டம்

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக-விற்குள் தற்போது பூகம்பம் வெடிக்கத் தொடங்கியுள்ளது. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு(தவெக) ஆதரவளிப்பது தொடர்பாக, அதிமுக-வின் 35-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் அலுவலகத்தில் ரகசிய ஆலோசனை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. News18 வெளியிட்டுள்ள செய்தியின்படி மயிலம் தொகுதியில் வெற்றி பெற்ற சி.வி. சண்முகத்தைச் சந்தித்த எம்.எல்.ஏ-க்கள், தவெக-வுடன் கூட்டணி அமைப்பது குறித்துக் கட்சித் தலைமை பரிசீலிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். அதிமுக 47 இடங்களை மட்டுமே பெற்றுள்ள நிலையில், தவெக-விற்கு ஆதரவளிப்பதன் மூலம் திராவிட எதிர்ப்பு ஓட்டுகளை ஒருமுறைப்படுத்தலாம் என்பது இவர்களின் வாதமாகும்.

விளக்கம்

பாண்டியராஜனின் "பீனிக்ஸ்" விளக்கம்

இதற்கிடையில், அதிமுகவின் இந்தத் தோல்வியைத் "தற்காலிகப் பின்னடைவு" என்று முன்னாள் அமைச்சர் க. பாண்டியராஜன் குறிப்பிட்டுள்ளார். திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து இப்போதும் 120-க்கும் மேற்பட்ட இடங்களை வைத்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், மக்கள் 'திராவிட மாடலை' நிராகரிக்கவில்லை என்றும், திமுக மீதான அதிருப்தி தவெக-விற்குச் சாதகமாக மாறியுள்ளது என்றும் தெரிவித்தார். எங்களைப் பொறுத்தவரை இது ஒரு பின்னடைவே தவிர வீழ்ச்சி அல்ல, அதிமுக மீண்டும் ஒரு பீனிக்ஸ் பறவையைப் போல மீண்டு வரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

காங்கிரஸ்

ஆட்சி அமைக்க தீவிரம் காட்டும் தவெக

காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை ஏற்கனவே உறுதி செய்துள்ள தவெக, தற்போது இடதுசாரிக் கட்சிகள் மற்றும் பிற சிறிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதற்கிடையில் அதிமுக எம்.எல்.ஏ-க்களின் இந்த அதிருப்தி நிலை, விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்குச் சாதகமாக அமையக்கூடும். தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத வகையில், அதிமுக-விற்குள் ஏற்பட்டுள்ள இந்த உட்கட்சி மோதல் ஒரு பிளவிற்கு வழிவகுக்குமா அல்லது தவெக-வுடன் ஒரு புதிய மெகா கூட்டணி உருவாகுமா என்பதை அடுத்த சில நாட்கள் தீர்மானிக்கும்.

Advertisement